நுவரெலியா நகரில் கடந்த நவம்பர் 27ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு, பிதுருதாலகல மலையில் இருந்து உருவாகும் தலங்கல ஓயா பெருக்கெடுத்ததே காரணம் என நுவரெலியா நகர மேயர் உபாலி வனிங்கசேகர தெரிவித்துள்ளார். நேற்று (18) நுவரெலியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேயர் இதனைத் தெரிவித்தார்.
நுவரெலியா மாநகர சபையின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிகரி ஏரியின் வான் கதவுகள் திறக்கப்படாததால் நகரம் வெள்ளத்தில் மூழ்கியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும், அந்த அறிக்கைகள் பொய்யானவை என மேயர் வலியுறுத்தினார். நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்கு முன்னரே கிரிகரி ஏரியின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூன்று நாட்களாக இடைவிடாது பெய்த கனமழை காரணமாக தலங்கல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்தமை, நகரில் சட்டவிரோத கட்டுமானங்கள், கால்வாய்கள் குறுகியமை மற்றும் கிரிகரி ஏரியின் வான் கதவுகளை விரிவாக்க முடியாமை ஆகிய காரணங்களால் நுவரெலியா நகரம் வெள்ளத்தில் மூழ்கியதாக மேயர் மேலும் விளக்கினார்.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்குச் செல்லும் வீதி, குதிரைப் பந்தய மைதானம் மற்றும் கோல்ஃப் மைதானம் உட்பட பல இடங்கள் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட விவசாய, சுற்றுலா மற்றும் வர்த்தகத் துறைகளை மேம்படுத்தவும், நகரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவரவும் அனைவரின் ஒத்துழைப்பும் அத்தியாவசியம் என மேயர் தெரிவித்தார். எதிர்காலத்தில் இவ்வாறான வெள்ளப்பெருக்குகளைத் தடுப்பதற்காக குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டங்களை நடைமுறைப்படுத்த நுவரெலியா மாநகர சபை தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
பிரதி மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி சிவன்கோதி யோகராஜா, நகர ஆணையாளர், நகர செயலாளர் மற்றும் நகர சபையின் ஆளும் சபை உறுப்பினர்களும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.