இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலக கும்பல் உறுப்பினர் கெஹெல்பாத்தார பத்மே தொடர்பான விசாரணையின் பேரில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (02) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
குறித்த பாதாள உலக உறுப்பினரால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சந்தேகநபருடன் முன்னாள் அமைச்சருக்கு இருந்த தொடர்புகள் குறித்து விசாரணை அதிகாரிகள் விரிவாகக் கேள்வி எழுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரசன்ன ரணதுங்க, கெஹெல்பாத்தார பத்மே தனது கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் அரசியல் நடவடிக்கைகளுக்காக தன்னுடன் தொடர்பு வைத்திருந்தாரா என்றும் அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாகக் குறிப்பிட்டார். சந்தேகநபரின் தந்தை தன்னுடன் நெருக்கமாகப் பணியாற்றிய போதிலும், சந்தேகநபருடன் தனக்கு வலுவான தொடர்பு இல்லை என்று முன்னாள் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக இன்று (03) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும், கெஹெல்பாத்தார பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள பல மாடல்களிடமும் விசாரணை அதிகாரிகள் இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.