இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்பட மூன்று உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு இணையவழி லாட்டரியைத் தொடங்குவதற்கான கொள்முதல் செயல்முறையின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த கைது பெப்ரவரி 24 அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் ஏ.எம். பிரியங்க மத்தும பண்டார அத்தபத்து, முன்னாள் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) துரைசாமி சிவானந்தன் மற்றும் பிரதம நிதி அதிகாரியாக கடமையாற்றிய களுதேவ அரவிந்த பிரியதர்ஷினி டி சில்வா ஆகிய மூவராவர். இவர்கள் இலஞ்ச ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இணையவழி லாட்டரிக்கான விநியோகஸ்தரைத் தெரிவுசெய்யும் போது, முதலில் வெற்றிகரமாகத் தெரிவுசெய்யப்பட்ட முதலீட்டாளருக்கு டெண்டரை வழங்காமல் அரசுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக இலஞ்ச ஆணைக்குழு கண்டறிந்துள்ளது. அத்துடன், மீண்டும் ஒருமுறை ஏலங்களைக் கோரும் நோக்கில், முதல் ஏல அழைப்பில் தோல்வியடைந்து நிராகரிக்கப்பட்ட நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்திடமிருந்து பத்து இலட்சம் ரூபா (ரூ. 1,000,000/-) பணத்தை இலஞ்சமாக கேட்டுப் பெற்ற பாரிய குற்றச்சாட்டும் இந்த சந்தேகநபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த மூன்று சந்தேகநபர்களும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.