களுத்துறை சிறைச்சாலையில் தாக்கப்பட்ட பின்னர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 'குடு சளிந்து'வின் சீடனைப் பார்க்க முன்தினம் (04) அதிகாலை 2.30 மணியளவில் வந்த ஒருவர், வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு பிஸ்டலை காட்டி மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தெற்கு களுத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி 28ஆம் திகதி சிறைச்சாலையில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 'குடு சளிந்து'வின் சீடன் என கூறப்படும் கைதி, சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது, வார்டுக்கு அருகிலுள்ள நுழைவாயிலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரி இந்த சம்பவத்தை எதிர்கொண்டார்.
“நான் கடமையில் இருந்தபோது, ஒரு மின்சார மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், தனது உறவினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு உடல்நிலை மோசமாக இருப்பதை அறிந்ததால் பார்க்க வந்ததாகவும் கூறி, கதவைத் திறக்குமாறு கேட்டார். நான் அந்த கோரிக்கையை நிராகரித்தபோது, அவர் எனக்கு பிஸ்டலை காட்டி மிரட்டினார். எனக்கு ஏற்பட்ட பயம் காரணமாக நான் யாரிடமும் சொல்லவில்லை” என்று அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொலிஸாருக்கு முன்தினம் 04ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு அறிவிக்கப்பட்டதுடன், பாதுகாப்புப் பிரிவில் அவரது நெருங்கிய மேற்பார்வை அதிகாரி, தனக்கு இதுபற்றி தெரியாது என்று கூறியுள்ளார்.
அதன்படி, இந்த முறைப்பாடு குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். களுத்துறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பத்மினி வீரசூரிய மற்றும் களுத்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், களுத்துறை தலைமையகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் நாலக குணசேகர மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.