பல ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி, கட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
ஹங்கேரி அரசாங்கத்தின் கடன் உதவியின் கீழ் 14.37 பில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில் 2021 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் ஆரம்பப் பணிகள் தொடங்கப்பட்ட போதிலும், கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடன் உதவி இடைநிறுத்தப்பட வேண்டியிருந்ததால், பாலத்தின் பணிகளும் தடைப்பட்டன. எவ்வாறாயினும், 12.27 பில்லியன் ரூபா உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி மீண்டும் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த 22 மாதங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
374 மீட்டர் நீளமுள்ள இந்த மேம்பாலம் வில்லியம் கோபல்லாவ வீதியில் அமைக்கப்படவுள்ளதுடன், இது கன்னோருவ வீதியில் மகாவலி ஆற்றின் வலது கரையில் தொடங்கி கட்டம்பே சந்தி மற்றும் ரயில்வே பாதைக்கு மேலே செல்லும். பேராதனை வீதியில் அமைக்கப்படும் துணை மேம்பாலம் ரயில்வே பாதைக்கு மேலே உள்ள பிரதான மேம்பாலத்துடன் இணைக்கப்பட்டு, அங்கிருந்து மூன்று வழித்தடங்களுடன் வில்லியம் கோபல்லாவ வீதியுடன் இணைக்கப்படும் வகையில் வடிவமைக்கப்படும்.
கட்டம்பே சந்திக்கு அருகில் நீண்டகாலமாக நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதும், ரயில்வே கடவை மூடப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து தாமதங்களைத் தவிர்ப்பதும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் முக்கிய நோக்கமாகும்.
