2025 (2026) கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் அமைந்துள்ள 3,545 பரீட்சை நிலையங்களில் 2026 பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி முதல் பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. அதிபர்கள் தங்கள் வலயக் கல்வி அலுவலகத்தில் பரீட்சைப் பொறுப்பு பிரதி அல்லது உதவி கல்விப் பணிப்பாளரைச் சந்தித்து அந்த அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அனுமதிப்பத்திரங்களில் பெயர், பாடங்கள் அல்லது ஊடகம் உள்ளிட்ட தகவல்களை திருத்த வேண்டியிருந்தால் இணையம் மூலம் அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதிப்பத்திரங்களைத் திருத்துவதற்காக அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லை (Password) பயன்படுத்தி www.doenets.lk இணையத்தளத்திற்குச் சென்று தேவையான மாற்றங்களைச் செய்ய அதிபர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் மேற்கூறிய இணையத்தளத்திற்குச் சென்று தங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள முடியும். அனைத்து திருத்தப் பணிகளும் 2026 பெப்ரவரி 10ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர் முடிக்கப்பட வேண்டும் என்றும், எந்தவொரு காரணத்திற்காகவும் இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைத் திணைக்களம் கடுமையாக வலியுறுத்துகிறது.
பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள விரும்பினால், 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது 011 2784208 மற்றும் 011 2784537 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவோ அல்லது 011 2784422 என்ற தொலைநகல் இலக்கம் மற்றும் gceolexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ பரீட்சைத் திணைக்களத்தைத் தொடர்புகொள்ளலாம்.