ரவிராஜ் கொலை செய்ததாகக் கூறப்படும் கடற்படை வீரர்களின் விடுதலையை நீதிமன்றம் ரத்து செய்கிறது

court-reverses-acquittal-of-marines-said-to-have-killed-raviraj

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளையும் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதன்படி, குறித்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடற்படை வீரர்களான பிரசாத் சந்தன குமார, காமினி சேனவிரத்ன மற்றும் பிரதீப் சமிந்த அத்துடன் சிவகாந்தன் விவேகானந்தன் என்ற சரண் மற்றும் பெபியன் ரொய்ஸ்டன் ஆகிய ஐவருக்கும் எதிராக 2016 ஆம் ஆண்டு சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தொடரப்பட்டது.




இந்த பிரதிவாதிகளின் தரப்பால் செய்யப்பட்ட கோரிக்கையின் பேரில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை சிங்கள மொழி பேசும் ஜூரி சபை முன்னிலையில் நடைபெற்றது. அங்கு, இந்த வழக்கின் முக்கிய சாட்சியான, தற்போது தடுப்புக்காவலில் உள்ள சம்பத் மனம்பேரி தனது சாட்சியத்தை வழங்கினார். நீண்ட விசாரணைக்குப் பிறகு, ஜூரி சபையின் ஒருமித்த முடிவின் அடிப்படையில், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பந்தப்பட்ட அனைத்து பிரதிவாதிகளையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தார். இந்தத் தீர்ப்பை சவால் செய்து சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் குறித்து மேல் நீதிமன்ற நீதிபதி ஜூரி சபைக்கு போதுமான விளக்கங்களை வழங்கவில்லை என்று சட்டமா அதிபர் தனது மேன்முறையீட்டில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த மேன்முறையீட்டை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சஷி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம் இந்த புதிய தீர்ப்பை அறிவித்தது. நீதிபதி அமல் ரணராஜாவின் ஒப்புதலுடன் நீதிபதி சஷி மகேந்திரன் அறிவித்த அந்தத் தீர்ப்பில், நள்ளிரவு கடந்து அதிகாலை 12.50 மணியளவில் கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த தீர்ப்பை அறிவித்தது அசாதாரணமான நிலைமை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




பிரதான சாட்சியான சம்பத் மனம்பேரியின் சாட்சியங்கள் மூலம் பிரதிவாதிகளுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், அது குறித்து ஜூரி சபைக்கு மேல் நீதிமன்ற நீதிபதி போதுமான விளக்கங்களை வழங்கவில்லை என்ற சட்டமா அதிபரின் வாதத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களுக்கு சட்ட மற்றும் சாட்சிய மதிப்பு இருந்தபோதிலும், அது தொடர்பாக ஜூரிக்கு சரியான அறிவுறுத்தல்களை வழங்க மேல் நீதிமன்றம் தவறிவிட்டது என்று தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், மேல் நீதிமன்றத்தின் விடுதலைத் தீர்ப்பை நிராகரித்து, சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து புதிய விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

Post a Comment

Previous Post Next Post