வாகனம் அல்லாத பிரிவுகளின் கீழ் எரிபொருளைப் பெறும் நுகர்வோருக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த வாரம் முதல் அதிகரிக்க டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், மீன்பிடி படகுகள் மற்றும் மின் உற்பத்தி இயந்திரங்களுக்கும் புதிய QR குறியீடு முறையை அறிமுகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை வெளிப்படுத்தினார்.
இதன்படி, சம்பந்தப்பட்ட நுகர்வோர் தங்கள் QR குறியீட்டை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சமர்ப்பிப்பதன் மூலம் தங்கள் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இந்த செயல்முறை தொடர்பான முழுமையான வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தியோகபூர்வ நடைமுறைகள் அடுத்த திங்கட்கிழமை மக்களுக்கு தெளிவாக அறிவிக்கப்படும் என்றும் ஆலோசகர் மேலும் தெரிவித்தார்.
தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மற்றும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இலங்கையிலும் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் QR அமைப்பு மூலம் எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.