சப்ரகமுவ மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றிய ஒரு பிரதான பொலிஸ் பரிசோதகர், இரண்டு இலட்சத்து நாற்பத்தாறாயிரம் ரூபாவை கப்பமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் குருவிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர், தற்போது மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி விசேட விசாரணைப் பொலிஸ் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு காரணம், குருவிட்ட, எதிரியன்வெல, உடகடை பிரதேசத்தில் வசிக்கும் ஒரு இளைஞன், 1000 CC எஞ்சின் கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை விற்பனை செய்வதற்காக வட்ஸ்அப் (WhatsApp) சமூக ஊடகக் குழுவில் அனுப்பிய செய்தியாகும். குறித்த செய்தியை அவதானித்த பின்னர் இளைஞனின் வீட்டிற்கு வந்த சந்தேகநபரான பொலிஸ் பரிசோதகர், இவ்வாறான மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் அது தொடர்பில் தான் விசாரணை நடத்துவதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவம் சட்டரீதியாக நீடித்தால் அவரது மகன்களுக்கு வெளிநாடு செல்வதற்கும் தடைகள் ஏற்படலாம் என்று கூறி இளைஞனின் தந்தையை அச்சுறுத்தியுள்ளார்.
அந்த நிலையிலிருந்து தப்பிப்பதற்காக சந்தேகநபர் முதலில் பத்து இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளார், தந்தையின் சிரமத்தை வெளிப்படுத்திய பின்னர் அதை ஐந்து இலட்சமாகவும், இறுதியாக மூன்று இலட்சமாகவும் குறைத்துக் கொள்ள இணங்கியுள்ளார். அதன் பின்னர் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மற்றொருவருடன் மோட்டார் காரில் வந்து குருவிட்ட - தெரணியகல வீதியில் குறித்த பணத்தைப் பெற்றுள்ளார். அங்கு முறைப்பாட்டாளர் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா இருப்பதாக நினைத்து பணத்தைக் கொடுத்துள்ளார், ஆனால் அதில் ஐநூறு ரூபா நோட்டுகள் சில குறைவாக இருந்ததால் குறைந்த நான்கு ஆயிரம் ரூபா பணம் குறித்தும் சந்தேகநபர் விசாரித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு பணம் கொடுத்த பின்னரும் பிரச்சினையை முடிக்காமல், குறித்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கடுவெல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வருமாறு சந்தேகநபர் தொலைபேசியில் அறிவித்துள்ளார். கப்பப் பணம் கொடுத்த பின்னரும் இந்த அச்சுறுத்தல் தொடர்வதை உணர்ந்த இளைஞனின் தந்தை தனக்குத் தெரிந்த மற்றொரு பொலிஸ் அதிகாரிக்கு இது குறித்து அறிவித்த பின்னர் குறித்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.