மேற்கு வடக்கு குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட 20 சொகுசு கார்கள் உட்பட வாகனங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வாகனங்கள் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளதுடன், இந்த வாகனங்களை சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யும் நடவடிக்கைக்கு சில பொலிஸ் மற்றும் முப்படை உறுப்பினர்களின் உதவியும் கிடைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமிந்த தர்மரத்னவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பேரில், அவரது முழுமையான மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடவத்தை, கம்பஹா மற்றும் ஜா-எல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கொழும்பு, கடவத்தை, மீகாவத்தை மற்றும் மொனராகலை ஆகிய பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த அசெம்பிள் செய்யப்பட்ட வாகனத் தொகுதியை புலனாய்வாளர்கள் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட வாகனங்களில் 05 சொகுசு கார்கள், 03 ஜீப் வண்டிகள், ஒரு வேன், ஒரு லொறி மற்றும் பல மோட்டார் சைக்கிள்கள் அடங்கும். இந்த கடத்தல்காரர்கள் குறித்த வாகனங்களின் சேசிஸ் இலக்கங்களை மாற்றி பல்வேறு நபர்களுக்கு விற்றுள்ளனர். பின்னர், வாகனங்களை விற்ற தரப்பினரே மீண்டும் திருடி வேறு தரப்பினருக்கு விற்கும் ஒரு நுட்பமான கடத்தல் நடவடிக்கையை நடத்தி வந்துள்ளது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட மேலும் 40 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அனைத்து வாகனங்களையும் கைப்பற்றுவதற்காக பல பொலிஸ் குழுக்கள் தற்போது சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றன. ஒருவரின் வாகனம் திருடப்பட்டிருந்தால் அல்லது காணாமல் போயிருந்தால், அது குறித்து மேற்கு வடக்கு குற்றப் பிரிவின் 0112947780 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சட்டவிரோத வாகனங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கொலைகள், கொள்ளைகள், கப்பம் கோரல்கள் மற்றும் தாக்குதல்கள் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விரிவான விசாரணை மேலும் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். தற்போது தடுப்புக் காவலில் உள்ள மூன்று சந்தேகநபர்களையும் சம்பந்தப்பட்ட அதிகார வரம்புகளின் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.