பொலிஸ் கட்டளையை மீறி தப்பிச் சென்ற மரக்கறி லாரியில் 3 1/2 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள்

3-12-crore-worth-of-drugs-in-the-vegetable-truck-that-fled-despite-police-orders

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பை பிரதேசத்தில் பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த மரக்கறி ஏற்றிச் செல்லும் லொரி வண்டி ஒன்றை துரத்திச் சென்று கைது செய்ய மாதம்பை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு நேற்று (21) மாலை வெற்றி பெற்றது. அந்த லொரி வண்டியை சோதனையிட்டபோது, அதில் சூட்சுமமாக மறைத்து கடத்தப்பட்டு வந்த சுமார் மூன்றரை கோடி ரூபாய் பெறுமதியான சட்டவிரோத போதை மாத்திரைகள் இரண்டு இலட்சம் பதினாறாயிரம் (216,000) பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.




மாதம்பை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஜயதிலக்க (84566) என்பவருக்கு கிடைத்த உறுதியான தகவலின் அடிப்படையில் இந்த அவசர போக்குவரத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு மரக்கறிகளை ஏற்றி வந்த குறித்த லொரி வண்டியை நிறுத்த பொலிஸ் அதிகாரிகள் சைகை செய்தபோதிலும், சாரதி அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னோக்கிச் செலுத்தியதால் அதிகாரிகள் வாகனத்தை துரத்திச் சென்று தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட லொரி வண்டி மேலதிக விசாரணைகளுக்காக மாதம்பை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு மரக்கறிகள் அடங்கிய கோணிகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான மூன்று பெட்டிகளை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். சாதாரண மருந்துப் பொட்டலங்கள் போன்று தயாரிக்கப்பட்டிருந்த அந்த ஒவ்வொரு பெட்டியிலும் 72,000 போதை மாத்திரைகள் வீதம் மொத்தம் 216,000 மாத்திரைகள் அடங்கியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.




இந்த சட்டவிரோத போதை மாத்திரைகள் கல்பிட்டி, நொரோச்சோலை பிரதேசத்திலிருந்து கொழும்புக்கு கடத்தப்பட்டு வந்ததாக ஆரம்ப பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. போதைப்பொருட்களுக்கு கடுமையாக அடிமையானவர்களுக்கு போதைப்பொருட்கள் கிடைக்காத சந்தர்ப்பங்களில் இந்த மாத்திரை வகை ஒரு மாற்றீடாக பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

3-12-crore-worth-of-drugs-in-the-vegetable-truck-that-fled-despite-police-orders

Post a Comment

Previous Post Next Post