
ஸ்ரீலங்கா டெலிகாம், எயர் லங்கா (ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்), அரச காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் லங்கா ஹொஸ்பிட்டல் ஆகிய நிறுவனங்களை விற்பனை செய்வதற்காக கடந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்டிருந்த முடிவு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என சட்டமா அதிபரால் நேற்று (02) உயர் நீதிமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முடிவைத் தடுக்கக் கோரி வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவொன்று நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அப்போதைய அமைச்சரவை இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தது.
அச்சல வெங்கப்புலி, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அங்கு சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்திய அரச சட்டத்தரணியால் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு நீதிமன்றத்திற்கு விளக்கப்பட்டது. அந்த நிறுவனங்களை விற்பனை செய்யும் முடிவு கைவிடப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பதிலாக அந்த நிறுவனங்களை மறுசீரமைக்கும் நோக்கத்துடன் மட்டுமே தற்போது குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் இந்த புதிய முடிவு குறித்து விளக்கமளிக்கப்பட்ட பின்னர், சட்டத்தரணி சவதி ராஜகருணாவுடன் மனுதாரர் தரப்புக்காக ஆஜரான சட்டத்தரணி கனிஷ்க விதாரண, சம்பந்தப்பட்ட மனுவை மேலும் தொடர வேண்டிய அவசியம் தமது தரப்புக்கு இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்ட உயர் நீதிமன்றம், மனு விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்தது.