குழந்தையை கேடயமாகப் பயன்படுத்திய ஹெரோயின் கடத்தல்காரி கைது செய்யப்பட்டார்

the-heroin-trafficker-who-disguised-the-baby-as-a-shield-was-arrested

தனது இரண்டு மாதக் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு மிகவும் சூட்சுமமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண்ணும், அவருக்கு உதவிய மற்றுமொரு நபரும் நேற்று (05) பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சுற்றிவளைப்பின் போது ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய நான்கு கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.




இந்த பெண்ணின் கணவரும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் தற்போது சிறையில் உள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரிலேயே இவர் இந்த கடத்தலை நடத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பண்டாரகம, மெதகம, படபொத்த பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண், தனது உடலில் போதைப்பொருளை மறைத்துக்கொண்டு, குழந்தையையும் தூக்கிக்கொண்டு படபொத்த மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் போதைப்பொருளை மறைத்து வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அத்துடன், தனது வீட்டில் நீர் குழாய்க்கு அருகில் இருந்த பிளாஸ்டிக் குப்பியில் ஹெரோயினை மறைத்து வைத்துள்ளார். இந்த கடத்தலுக்கு அவரது வீட்டுக்கு அருகிலேயே வசிக்கும் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் ரொஷான் பெரேராவுக்கு கிடைத்த குறிப்பிட்ட புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் 38 வயதுடைய சந்தேகநபரான பெண்ணும், 44 வயதுடைய சந்தேகநபரான ஆணும் ஆவர். இவர்கள் இருவரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சன்ன அமரசேகர அவர்களின் வழிகாட்டலிலும், ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரொஷான் பெரேரா உள்ளிட்ட பொலிஸ் குழுவினரும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post