வாகன விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருபது நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பக்தி தர்மப்பிரிய மென்டிஸ் கடந்த 3ஆம் திகதி காலமானார்.
இந்த துரதிர்ஷ்டவசமான விபத்து பத்தரமுல்ல, அக்குரேகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அவசர தேவைக்காக வாடகை மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பிரதான வீதிக்கு நுழையும் சந்தர்ப்பத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த ஒருவரின் மோட்டார் காரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பக்தி மென்டிஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
காலி ரிச்மண்ட் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற அவர், 2000ஆம் ஆண்டு தினசரி லக்பிம பத்திரிகையின் ஆரம்ப ஆசிரியக் குழு உறுப்பினராக ஊடகத் துறைக்குள் நுழைந்தார். அதன் பின்னர் தினமின, ரிவிர உள்ளிட்ட லேக்ஹவுஸ் பத்திரிகைகளிலும், ஹிரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பணியாற்றிய அவர், பாதுகாப்பு, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது ஆக்கபூர்வமான ஊடகவியலை வழிநடத்திய துணிச்சலான ஊடகவியலாளர் ஆவார். ஒருமுறை அவர் ஒரு தேர்தலுக்கும் வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார்.
காலமானபோது நாற்பத்தேழாவது வயதில் இருந்த பக்தி மென்டிஸ், 'திவயின' உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஒருகாலத்தில் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் சுகதபால மென்டிஸின் புதல்வர் ஆவார். அவரது அன்பான மனைவி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெகுசனத் தொடர்பு ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் இமேஷா தர்மசேன ஆவார். அத்துடன், அவர் மாலபே ஹொரைசன் பாடசாலையில் கல்வி கற்கும் தீமத் தேஜக்க மென்டிஸின் அன்பான தந்தையும் ஆவார். குடும்பத்தில் மூன்று சகோதரிகளின் சகோதரனாகவும் அவர் இருந்தார்.
ஊடகத் துறையிலும் அதற்கு வெளியேயும் அனைவராலும் நேசிக்கப்பட்ட, மற்றவர்களின் துயரத்தில் எப்போதும் துணை நின்ற அவர், எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் இருந்த ஒரு சக ஊடக நண்பர். அவரது உடல் கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் காலி, பூஸ்ஸ, மஹகெதர தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதிச் சடங்குகள் 6ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு காலி தடல்ல பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.