
வெளிநாட்டில் மறைந்திருந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தலை இயக்கி வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'ஹோமாகம ககன' என்பவரின் இரண்டு முக்கிய சீடர்கள் மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஹோமாகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருள் தொகையும், அவற்றை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஆடம்பர மோட்டார் காரும் இந்த சுற்றிவளைப்பின் போது பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூன்றாவது விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் பத்தும் அஞ்சனவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், துபாயில் கைது செய்யப்பட்ட சிவப்பு அறிவிப்புப் பெற்ற 'கொண்ட ரஞ்சி' அல்லது ரஞ்சித் குமார் என்ற குற்றவாளியின் முக்கிய சீடர் சுமார் முப்பது கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் கடந்த 10ஆம் திகதி கணேமுல்லையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் இந்த புதிய கைதுகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
சுமார் மூன்று கிலோகிராம் கொகைன் போதைப்பொருள் மோட்டார் காரில் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் முதலில் மாத்தறை, ஹிக்கடுவ மற்றும் பத்தேகம ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருப்பினும், தொலைபேசி தரவு அறிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுக்குப் பிறகு, சந்தேகநபர்கள் ஹோமாகம பிரதேசத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது அவர்களைப் பிடிக்க புலனாய்வாளர்கள் வெற்றி பெற்றனர். அங்கு பிரதான சந்தேகநபரிடமிருந்து 2 கிலோ 400 கிராம் ஐஸ் போதைப்பொருள், 112 கிராம் ஹெரோயின் மற்றும் 8 கிராம் கொகைன் ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இந்த போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வரும் ககன என்பவர் பல கொலைகளுடன் தொடர்புடையவர் என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், விஷ போதைப்பொருள் சட்டத்தின் கீழ் ஏழு நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்படவுள்ளது. இவர்கள் வேறு குற்றங்களுக்காகவும் தொடர்புபட்டுள்ளார்களா மற்றும் மேலும் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், இச்சம்பவம் தொடர்பான மேலும் ஒரு தொகுதி போதைப்பொருள் விரைவில் கைப்பற்றப்படவுள்ளதாகவும் ஒரு உயர் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.