
துபாய் நாட்டிற்கு தப்பிச் சென்று அங்கு மறைந்திருந்து பாரிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல்களை இயக்கி வருவதாக சந்தேகிக்கப்படும் 'சமன் கொல்' என்ற பாதாள உலக தலைவரின் பிரதான நிதி கட்டுப்பாட்டாளராக செயல்பட்ட ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை, ரொடும்ப பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் அம்பலாங்கொடை பிரதேசத்தில் இந்த சந்தேகநபர் நேற்று முன்தினம் (4) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் சாதாரண டயர் பொருத்தும் நிலையத்தில் பணிபுரிபவர் என்றாலும், அவர் மிகவும் ஆடம்பரமான ஒரு பெரிய வீட்டின் உரிமையாளர் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டபோது அவரது வீட்டில் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இருபத்தொன்பது இலட்சத்து முப்பத்து மூவாயிரம் (2,933,000) ரூபாய் பெறுமதியான சட்டவிரோத பணம் மற்றும் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குச் சொந்தமான முப்பது அட்டைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஆடம்பர வீடும், அந்த பெரிய பணமும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதா என்பது குறித்து தற்போது விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த கித்சிறி ஜயலத் அவர்களுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த வெற்றிகரமான சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'சமன் கொல்'லின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய மற்றொருவரும் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சில நாட்களுக்கு முன்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார், அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிரதான நிதி கட்டுப்பாட்டாளராகக் கருதப்படும் புதிதாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலும் விசாரணை செய்து போதைப்பொருள் வலையமைப்பு பற்றிய தகவல்களை வெளிக்கொணர்வதற்காக பொலிஸார் நேற்று அவருக்கு எதிராக தடுப்புக் காவலில் வைப்பதற்கான உத்தரவுகளையும் பெற்றுள்ளனர்.