கடந்தகால நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மீண்டு, இலங்கையின் பொருளாதாரம் தற்போது வலுவான மீள்திறன் கொண்ட ஒரு நிலையான நிலையை அடைந்துள்ளது என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். நேற்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
குறிப்பாக வெளிநாட்டு கையிருப்புக்களை வலுப்படுத்துதல், அரச வருமானத்தை முறையாக முகாமைத்துவம் செய்தல் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி இலக்குகளை வெற்றிகரமாக அடைதல் ஆகிய விடயங்களின் அடிப்படையில் இந்த பொருளாதார ஸ்திரத்தன்மை கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அந்த பிரதிநிதிகள் குழு, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அடையப்பட்டுள்ள இந்த பொருளாதார முன்னேற்றம் குறித்து தமது பலமான பாராட்டைத் தெரிவித்தது.இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் முக்கிய நோக்கம், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி (EFF) திட்டத்தின் கீழ் இலங்கை தற்போது அமுல்படுத்தி வரும் பொருளாதார சீர்திருத்தச் செயல்முறையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதாகும். அதன்படி, குறித்த திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் தற்போதைய நிலை குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன், அண்மைக் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் இதுவரை அடைந்த வெற்றிகள் குறித்தும் ஜனாதிபதிக்கும் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
தற்போது அடையப்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை அப்படியே பாதுகாத்து, நாணய நிதியத்தின் திட்டத்துடன் எதிர்கால நடவடிக்கைகளை எவ்வாறு திட்டமிடுவது என்பது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக உலகளவில் எழுந்துள்ள சவால்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அந்த சூழ்நிலை காரணமாக நாட்டின் எரிபொருள் விலைகள் மற்றும் எரிசக்தி விநியோக வலையமைப்புக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை முறையாக முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கம் ஏற்கனவே ஒரு முறையான திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அங்கு சுட்டிக்காட்டினார். அத்துடன், இவ்வாறான வெளிநாட்டு நெருக்கடிகள் ஏற்பட்டாலும், பொது மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் துன்பங்களையும் குறைப்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர் வலியுறுத்தினார்.
உலகளாவிய ரீதியில் எழும் இவ்வாறான வெளிநாட்டு சவாலான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், தற்போது அடையப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியை வீழ்ச்சியடைய விடாமல், மக்களின் வாழ்க்கையையும் தேசிய பொருளாதாரத்தையும் சிறப்பாக முகாமைத்துவம் செய்து அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டம் நாணய நிதியப் பிரதிநிதிகளின் விசேட பாராட்டிற்கு காரணமாக அமைந்தது. இந்த முக்கியமான கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் இலங்கை செயற்பாடுகளின் தலைவர் எவன் பப்பஜோர்ஜியோ தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துகொண்டது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.