பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராக அடையாளம் காணப்பட்ட ஷிரான் பாசிக் உட்பட 12 பேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து கொண்டு இங்கு போதைப்பொருள் வலையமைப்பை இயக்கி வந்ததாகக் கூறப்படும் அவர், அங்கு ஒரு பெரும் பணக்காரராக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
தற்போது கைதாகியுள்ள இந்த சந்தேகநபர் எப்படியாவது சட்டப் பிடியிலிருந்து தப்பித்து விடுதலை பெறுவதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக உள்நாட்டு புலனாய்வுப் பிரிவினருக்கு விசேட தகவல்கள் கிடைத்துள்ளன.சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ளவர்கள், சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த ஷிரான் பாசிக், கடந்த காலத்தில் நாட்டின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளின் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்துவதற்கும் பங்களிப்பு செய்துள்ளதாக புலனாய்வுப் பிரிவின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அங்கு தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை பிரதேசங்களில் இருந்து பேருந்துகள் மூலம் பெருமளவிலான மக்களை சம்பந்தப்பட்ட அரசியல் கூட்டங்களுக்கு ஈர்க்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த அரசியல் கூட்டங்களில் ஒன்று கொழும்பு சுகததாச விளையாட்டரங்கிலும் மற்றொன்று தெஹிவளை பிரதேசத்திலும் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஷிரான் பாசிக் என்பவருக்குச் சொந்தமான பெரிய அளவிலான வணிக நிறுவனங்கள் மற்றும் பல மதிப்புமிக்க சொத்துக்கள் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில், இவரின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்த இலங்கை பொலிஸ், இவரின் மகனிடம் இருந்த ஒரு மதிப்புமிக்க மோட்டார் கார் உட்பட பல சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கிய இந்த முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஏனைய சந்தேகநபர்களை நாட்டின் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக இலங்கைக்கு அழைத்து வர சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பாதுகாப்புப் பிரிவினரும் தற்போது ஒரு விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.