வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சட்டப் பட்டங்களைப் பெற்று நாட்டிற்கு வரும் மாணவர்கள் தொடர்பாக இலங்கை சட்டக் கல்லூரி அதிகாரிகளால் விதிக்கப்பட்டுள்ள புதிய பரீட்சை நிபந்தனைகளை இடைநிறுத்தக் கோரிய மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. வெளிநாட்டுச் சட்டப் பட்டதாரிகளுக்கு விசேட நுழைவுப் பரீட்சையின் பின்னர் சட்டக் கல்லூரியின் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுப் பரீட்சைகளுக்கும் தோற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட இடைக்கால உத்தரவு கோரிக்கை இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பாத்திமா சிவர் உள்ளிட்ட வெளிநாட்டுப் பட்டதாரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த ரிட் மனுவின் மூலம் பிரதிவாதிகளாக சட்டக் கல்விச் சபை மற்றும் இலங்கை சட்டக் கல்லூரியின் அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.
இங்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்துத் தெரிவித்ததாவது, சட்டக் கல்விச் சபை விதிகளில் உள்ள 32வது பிரிவின்படி, வெளிநாட்டுச் சட்டப் பட்டதாரிகள் விசேட நுழைவுப் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் நேரடியாக சட்டக் கல்லூரியின் இறுதிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு சட்டரீதியான வாய்ப்பு உள்ளது. அவ்வாறிருந்தும், அவர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுப் பரீட்சைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் என சட்டக் கல்லூரி அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானம் சட்டவிரோதமானது என்பதால், அதனைத் தடுக்கும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு அவர்கள் கோரினர்.
எவ்வாறாயினும், பிரதிவாதி தரப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவர்தன அவர்கள் இந்த வாதத்தை நிராகரித்து விடயங்களை விளக்கினார். இநாட்டில் சட்டத்தரணிகளை இணைத்துக்கொள்ளும் முழுமையான செயல்முறையும் அதிகாரமும் இலங்கை உயர் நீதிமன்றத்திற்கே வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், உயர் நீதிமன்ற விதிகளின்படி சட்டப் பரீட்சை என்பது மூன்று பகுதிகளைக் கொண்ட ஒரு தனிப் பரீட்சை என்பதை வலியுறுத்தினார்.
உயர் நீதிமன்ற விதிகளுக்கு இணங்க மனுதாரர் மாணவர்கள் இந்த பரீட்சைப் பகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதால், சட்டக் கல்லூரியின் தீர்மானத்தை இடைநிறுத்த எந்தவொரு சட்டரீதியான தேவையும் எழவில்லை என பிரதிவாதி தரப்பு குறிப்பிட்டதுடன், முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதிபதிகள் குழாம், சம்பந்தப்பட்ட இடைக்கால உத்தரவைப் பிறப்பிப்பதை நிராகரிக்கத் தீர்மானித்தது. இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி அமில குமாரவின் ஆலோசனைப்படி ஜனாதிபதி சட்டத்தரணிகளான சுரேன் பெர்னாண்டோ, விரான் கொரயா மற்றும் சட்டத்தரணி சுரேன் ஞானதாச ஆகியோர் ஆஜராகினர். பிரதிவாதிகள் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விடயங்களை முன்வைத்தார்.