
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கலில் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அந்த நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.
போதரகமவினால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.சந்தேகநபருக்கு நீதிமன்றம் கடுமையான பிணை நிபந்தனைகளை விதித்ததுடன், அதன்படி ஐந்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளின் கீழ் அவரை விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடுக்கும் வகையில் பயணத் தடையையும் விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 28ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சந்தேகநபர் கபில சந்திரசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்குசலரத்ன பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார். அன்றைய தினம் இலஞ்ச ஆணைக்குழு சார்பில் ஆஜரான அதிகாரிகள் இந்த பிணை மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விடயங்களை விரிவாக ஆராய்ந்த நீதவான், பிணை மனு தொடர்பான தனது தீர்ப்பை இன்று காலை அறிவித்து, சந்தேகநபரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.