பொதுப் போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், நீண்ட தூர சேவைப் பேருந்துகளுக்கான புதிய இணையவழி (Online) ஆசன முன்பதிவு முறையை ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று (04) நண்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இந்த புதிய திட்டம் முதலில் நீண்ட தூர சேவைகளை வழங்கும் தனியார் பேருந்துகளை இலக்காகக் கொண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.இந்த புதிய முறை மூலம் பயணிகள் தங்கள் ஆசனங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்யும்போது, நிர்ணயிக்கப்பட்ட பேருந்துக் கட்டணத்துடன் மேலதிகமாக 30 ரூபா சிறிய சேவை கட்டணம் அறவிடப்படும் என அமைச்சர் இங்கு வலியுறுத்தினார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க, இந்த முன்னோடித் திட்டத்திற்காக ஆரம்ப கட்டத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் வழியாக இயங்கும் நீண்ட தூர தனியார் பேருந்துகள் இணைக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி, இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டத்தின் கீழ் மாக்கும்புரவில் இருந்து காலி, மாத்தறை, பதுளை மற்றும் கண்டிக்கு செல்லும் பேருந்துகளுக்கு இந்த வசதி கிடைக்கும். அத்துடன், கொழும்பில் இருந்து அம்பாறை, தெனியாய, மித்தெனிய, மொனராகலை மற்றும் அங்குணகொளபெலஸ்ஸ ஆகிய இடங்களுக்கு பயணிக்கும் பயணிகளுக்கும் இந்த புதிய ஆசன முன்பதிவு வசதியைப் பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மாற்றத் திட்டத்தின் பொது முகாமையாளர் இஷாரி சிறிவர்தனவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு புதிய முறையைப் பயன்படுத்தும் விதத்தை விளக்கினார். www.bustickert.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலமோ அல்லது 0112 001266 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ பயணிகள் தங்கள் ஆசனங்களை இலகுவாக முன்பதிவு செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், இணையவழி முறைக்கு மேலதிகமாக, மாக்கும்புர பல்துறை போக்குவரத்து மையத்திற்கு வரும் பயணிகளும் இந்த வசதியைப் பெறக்கூடிய வகையில் விசேட வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கு உதவுவதற்காக விசேட பணியாளர்களும் அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.