
அனுராதபுரம் பிரதேசத்தில் ஒரு சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட உணர்வுபூர்வமான சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன மற்றும் அந்தச் சிறுமியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்த பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (25) கூடிய இந்த ஒன்றியத்தின் கலந்துரையாடலை அதன் தலைவியும் அமைச்சருமான சரோஜா சாவித்திரி போப்ராஜ் அம்மையார் வழிநடத்தினார்.
சம்பந்தப்பட்ட சட்டச் செயல்முறை முறையாக நடைபெறுகிறதா என்பது குறித்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்று அங்கு பெண் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இந்த நெருக்கடி நிலை குறித்தும், பொதுவாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு வன்முறைகளைத் தடுப்பதற்காக தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பு மற்றும் நிறுவன அமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அடுத்த மாதம் 5ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை காவல்துறை, சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அத்துடன் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் உட்பட நாட்டின் பல முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த விசேட சந்திப்பிற்கு அழைக்கப்படவுள்ளனர். சமூக ரீதியாக பெரும் பேசுபொருளாக மாறியுள்ள இந்த சம்பவத்திற்கு மேலதிகமாக, நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் அங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
அனுராதபுரம் சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய நிறுவன மற்றும் சட்ட சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்காகவே பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கீழ் ஒரு விசேட உப குழுவும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் இணை உப தலைவிகளான பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் சட்டத்தரணி சமிந்திராணி கிரிஎல்ல ஆகியோரின் தலைமையில் இந்தக் குழு செயற்படும். திருமதி ஹேமாலி வீரசேகர, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன அம்மையார் அத்துடன் சட்டத்தரணிகளான சாகரிகா அத்தவுத, நிலந்தி கொட்டஹச்சி, நிலூஷா லக்மாலி கமகே, துஷாரி ஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, ஹசாரா லியனகே, ஹிருனி விஜேசிங்க மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் இந்த விசேட உப குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.