அனுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை பொது சமூகத்தின் முன் அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த சர்வஜன பலய கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகமவை உடனடியாக கைது செய்யுமாறு கோரி முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 'சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி' அமைப்பு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திடம் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளதுடன், குறித்த அரசியல்வாதி பாதிக்கப்பட்ட சிறுமியை விபச்சாரியாக குறிப்பிட்டமை கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த 'சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி' அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்தியர் துஷ் விக்ரமநாயக்க, திலும் அமுனுகமவின் இந்த கருத்து, குற்றத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேரடி பாதிப்பையும், பெரும் அநீதியையும் ஏற்படுத்தும் என்றார். இலங்கையில் நடைமுறையில் உள்ள பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி இத்தகைய செயல் ஒரு பாரதூரமான குற்றமாகும் என்பதால், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸ் பணியகம் உடனடியாக செயற்பட்டு சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
குற்றவாளியின் அந்தஸ்தைப் பாராமல் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஆதரவாக நிற்பது உணர்வுள்ள மனித இதயங்களைக் கொண்ட முழு சமூகத்தின் தலையாய கடமையாகும் என்று சுட்டிக்காட்டிய வைத்தியர், தற்போதைய சட்ட அமுலாக்கத்தில் உள்ள பலவீனங்கள் காரணமாக, சம்பவத்தின் சந்தேக நபர்களில் ஒருவரான அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு விசேட சலுகை காட்டப்படுவதாகத் தெரிகிறது என்று குற்றம் சாட்டினார். தானும் தனது குழுவினரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அட்டமஸ்தானத்தை தொடர்ந்து மதித்தாலும், இங்கு கேள்விக்குள்ளாக்கப்படுவது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் ஹேமரத்ன என்ற நபரின் நடத்தை மட்டுமே என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தான் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு மதத்துடனோ அல்லது சங்க சாசனத்துடனோ எந்த வகையிலும் தொடர்புடைய பிரச்சினை அல்ல என்பதை வலியுறுத்திய நிறைவேற்றுப் பணிப்பாளர், தற்போதைய சமூகம் எதிர்கொள்ளும் உண்மையான நெருக்கடி, சந்தேக நபருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பொறுப்புள்ள அரச நிறுவனங்கள் காட்டும் அலட்சியமே என்று கூறினார். எனவே, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸார் பல்வேறு குறுக்கு வழிகளில் நேரத்தை வீணடிக்காமல், இந்த சம்பவம் தொடர்பாக விரைவாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கோரினார்.