அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சான் டியாகோ நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய முஸ்லிம் பள்ளிவாசலான 'இஸ்லாமிக் சென்டர் ஆஃப் சான் டியாகோ' (ICSD) வளாகத்தை இலக்கு வைத்து 2026 மே 18 அன்று இரண்டு இளைஞர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திய 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் பின்னர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதிகாரிகள் இந்த சம்பவத்தை வெறுப்புக் குற்றமாக கருதி விசாரித்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்திலும் சந்தேக நபர்களின் வாகனத்திலும் முஸ்லிம் விரோத ஆவணங்களும் இனவெறி கருத்துகள் அடங்கிய குறிப்புகளும் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, இது இஸ்லாமியர்களை இலக்கு வைத்து திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதலை நடத்திய கேன் கிளார்க் (17) மற்றும் காலெப் வாஸ்கெஸ் (18) ஆகிய இரண்டு இளைஞர்களில் ஒருவரின் தாய், அன்று காலை 9:42 மணியளவில் காவல்துறைக்கு அவசர அழைப்பு விடுத்து, தனது மகன் இராணுவ சீருடை போன்ற உடையணிந்து, துப்பாக்கிகள் மற்றும் தனது காரையும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அதாவது காலை 11:43 மணியளவில், கிளெய்ர்மாண்டில் உள்ள அந்தப் பள்ளிவாசல் அருகே இந்த துப்பாக்கிச் சூடு பதிவாகியுள்ளது. விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் சில நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர், பிற்பகல் 1:07 மணியளவில் பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்திற்குள் சுட்டுக்கொண்டு இறந்த நிலையில் இருந்த இரண்டு சந்தேக நபர்களின் உடல்களைக் கண்டெடுத்துள்ளனர்.
இந்த துயர சம்பவத்தில் பள்ளிவாசலுக்கு வெளியே இருந்த மூன்று வயது வந்த ஆண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் எட்டு குழந்தைகளின் தந்தையும், பள்ளிவாசலின் நீண்டகால பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றிய அமின் அப்துல்லா ஆவார். தாக்குதல்தாரிகள் பள்ளிவாசலுக்கும் அதன் பள்ளி வளாகத்திற்கும்ள் நுழைய விடாமல், தனது உயிரைப் பணயம் வைத்து ஏராளமானோரின் உயிர்களைக் காப்பாற்றிய அவர், சமூகம் மற்றும் காவல்துறையின் சிறப்புப் பாராட்டுகளைப் பெற்று ஒரு நாயகனாகப் பெயரிடப்பட்டுள்ளார். உயிரிழந்த மற்ற இரண்டு நபர்கள் பள்ளிவாசலின் ஊழியர்கள் ஆவர், அவர்களில் ஒருவர் ஆசிரியர் முகமது நாடர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதலில் எந்த குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை, பள்ளிவாசலுக்குள் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அரை தானியங்கி துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணைகளில் தற்போது ஃபெடரல் புலனாய்வுப் பணியகமும் (FBI) இணைந்துள்ளது. 1989 இல் திறக்கப்பட்ட மற்றும் மழலையர் பள்ளி முதல் 3 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்படும் 'பிரைட் ஹொரைசன்' அகாடமியையும் உள்ளடக்கிய இந்த பள்ளிவாசல் வளாகம், சான் டியாகோ மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய முஸ்லிம் பள்ளிவாசலாகும். 2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் முஸ்லிம் விரோத சார்பு புகார்கள் சாதனை அளவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் (CAIR) இதற்கு முன்னர் தெரிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்ச்சியும் எதிர்ப்பும் எழுந்துள்ளன. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசோம், சான் டியாகோ மேயர் டாட் குளோரியா மற்றும் அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் (CAIR) ஆகியோரும் இதை "அமெரிக்க துயரம்" என்று கண்டித்துள்ளனர். மேலும் அறிவிக்கும் வரை இஸ்லாமிக் சென்டர் ஆஃப் சான் டியாகோ பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவத்திற்குப் பிறகு அமெரிக்கா முழுவதும் உள்ள இஸ்லாமிய மையங்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நியூயோர்க் காவல்துறையும் (NYPD) தங்கள் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்களைச் சுற்றி கூடுதல் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.