ஹபரண கிராமிய வைத்தியசாலையில் கடமையாற்றும் ஒரு வைத்தியரால், வைத்தியர் விடுதியில் வைத்து 14 வயது சிறுவன் ஒருவனுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த பாரதூரமான குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த வைத்தியரை ஹபரண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபரான வைத்தியர் 36 வயதுடைய அனுராதபுரம், சலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவனின் தாய் இந்த வைத்தியசாலையிலேயே தாதியாக கடமையாற்றுவதுடன், கடந்த 18ஆம் திகதி இரவு நேரத்தில் இந்தச் சிறுவன் தனது தாயைச் சந்திப்பதற்காக வைத்தியசாலை வளாகத்திற்கு வந்திருந்தான்.
அந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபரான வைத்தியர் சிறுவனை வைத்தியர் விடுதிக்குள் அழைத்துச் சென்று இந்த பாலியல் துஷ்பிரயோகத்தைச் செய்துள்ளதாக ஹபரண பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவத்திற்கு முகங்கொடுத்த சிறுவனிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது குறித்த சிறுவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஹபரண பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் சந்தேகநபரான வைத்தியர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.