
ஒரு சிறிய பூனையைக் கையில் ஏந்திக்கொண்டு, ஒரு முள்ளம்பன்றி குட்டியுடன், வயல்வெளி நடுவே உள்ள ஒரு குறுகிய நடைபாதையில் நடந்து செல்லும் ஒரு சிறுமியின் உணர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தைப் பெற்றது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களின் இதயங்களை வென்ற இந்த காணொளி, பங்களாதேஷின் கிராமப்புற சூழலில் எடுக்கப்பட்டது என்று கூறி, Facebook உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடக கணக்குகள் மூலம் பரவலாகப் பகிரப்பட்டது.
பிரபலமான 'தி டெலிகிராப்' (The Telegraph) செய்தித்தாள் கூட, தனது சமூக ஊடகப் பக்கங்களில் இந்தக் காட்சிகள் பங்களாதேஷைச் சேர்ந்தவை என்று குறிப்பிட்டு, '#Bangladesh' என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட சிறுமியை பங்களாதேஷ் நாட்டவர் என்று அறிமுகப்படுத்தியிருந்தது.எவ்வாறாயினும், பங்களாதேஷில் இருந்து இயங்கும் 'ஸ்ட்ரீம்' (Stream) என்ற உண்மைச் சரிபார்ப்பு நிறுவனம் நடத்திய விசாரணையில், இந்த காணொளி பங்களாதேஷில் அல்ல, இலங்கையில் படமாக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இந்த காணொளியின் முக்கிய காட்சிகளைப் பயன்படுத்தி இணையத்தில் மேற்கொண்ட தலைகீழ் படத் தேடல் (Reverse Image Search) சோதனையில், இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியான சிங்களத்தில் எழுதப்பட்ட ஒரு பதிவைக் கண்டறிய முடிந்தது. அந்தப் பதிவு "கமக்க அஸிரிய சன்ஹிதியாவ ஹா சுந்தர லமாவிய" (ஒரு கிராமத்தின் அழகு, நல்லிணக்கம் மற்றும் அழகான குழந்தைப்பருவம்) என்று குறிப்பிடப்பட்டிருந்தது, இது இந்த உண்மைகளை உறுதிப்படுத்த உதவியது.
இது குறித்து மேலும் விசாரித்த உண்மைச் சரிபார்ப்புக் குழு, இந்த காணொளி முதலில் 'பிரபாத் சில்வா' (Prabath Silva) என்ற Facebook கணக்கின் மூலம் இணையத்தில் பதிவேற்றப்பட்டது என்பதைக் கண்டறிந்துள்ளது. கடந்த ஜூன் 11 அன்று அந்தக் கணக்கில் பதிவேற்றப்பட்ட இந்தக் காட்சிகளுக்கு "அக்கா எக்க குபுரு யன இத்தேய மல்லி" (அக்காவுடன் வயலுக்குச் செல்லும் முள்ளம்பன்றி தம்பி) என்று சிங்களத்தில் ஒரு குறிப்பு இடப்பட்டிருந்தது. இந்தக் காணொளியின் பின்னணியை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட Facebook கணக்கின் உரிமையாளர் இலங்கையின் வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த பொலன்னறுவை மாவட்டத்தின் வசிப்பாளர் என்பது அவரது கணக்குத் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த Facebook கணக்கை ஆய்வு செய்தபோது, சம்பந்தப்பட்ட சிறுமிக்கும் முள்ளம்பன்றி குட்டிக்கும் இடையிலான உறவைக் காட்டும் மேலும் பல காணொளிகளை உண்மைச் சரிபார்ப்பாளர்கள் கண்டறிய முடிந்தது.