நள்ளதண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியில் மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகில் இன்று (22) காலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
காலை 8:15 மணியளவில் நள்ளதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்ற இந்த முச்சக்கரவண்டி, அதிக வேகம் காரணமாக சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி மோகினி நீர்வீழ்ச்சி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கரவண்டியில் ஐவர் பயணித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அதன் சாரதியும் மற்றுமொரு வயது வந்தவரும் ஆவர். அதில் பயணித்த மூன்று பாடசாலை மாணவர்களும் படுகாயமடைந்து மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நள்ளதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.