
கலால் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்த பாரிய சட்டவிரோத மதுபானக் கையிருப்பு கிழக்கு மாகாணத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சட்ட அமுலாக்க நிறுவனங்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. இந்தச் சம்பவத்துடன், பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் கடத்தல்காரர்களின் கைகளுக்குச் சென்ற சர்ச்சைக்குரிய விடயம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கோட்டாபய நிறுவன அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அங்கு ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5,575 போலி மதுபானப் போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் மதுபானத் தொழிலை ஒழுங்குபடுத்தும் கலால் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. சந்தேகத்திற்கிடமான இந்தப் போத்தல்கள் 43 வயதுடைய ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட மதுபானப் போத்தல்களில் இருந்த ஸ்டிக்கர்கள் தொடர்பான விசாரணைகளில், அவை பாதுகாப்பு ஸ்டிக்கர்களை அச்சிடுவதற்கு உரிமம் பெற்ற மெட்ராஸ் செக்யூரிட்டி பிரிண்டர்ஸ் (MSP) நிறுவனத்தால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட உண்மையான ஸ்டிக்கர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மூன்று வார காலப்பகுதியில் இவ்வாறான சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் ஜூன் 28 அன்று மாலபே பிரதேசத்தில் மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட சட்டவிரோத மதுபானக் கையிருப்பு கைப்பற்றப்பட்டது.
அந்தச் சம்பவத்தில் இராணுவ மேஜர் ஒருவர் உட்பட ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த விசாரணைகளின் போது மட்டக்களப்பு பிரதேசத்தில் பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மற்றொரு போலி மதுபானக் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மட்டக்களப்பு சம்பவத்தில் சந்தேகநபர் அந்த ஸ்டிக்கர்களை இந்தியாவில் உள்ள MSP நிறுவனத்துடன் தொடர்புடைய துணை முகவர் ஒருவர் மூலம் பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது புதிய விசாரணை ஒன்று நடைபெற்று வருகிறது.