கணேமுல்ல சஞ்சீவ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப் பிரிவினரால் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் ரிட் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி வர்த்தகர் ஷெஹான் குணசேகர தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள கொழும்பு குற்றப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க லொக்குஹெட்டி உள்ளிட்டோருக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அறிவித்து நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.
சசி மகேந்திரன் மற்றும் ஆதித்ய பாலபட்டபெந்தி ஆகியோரை உள்ளடக்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை வெளியிட்டது.இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ள ஷெஹான் குணசேகர, ‘கம்பஹா ஒஸ்மன்’ என்ற புனைப்பெயரால் அறியப்படும் பிரபல வர்த்தகர் ஒஸ்மன் குணசேகரவின் மகன் ஆவார், அவர் கம்பஹா இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர். சட்டத்தரணி அமில குமார ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், தான் ஒரு வர்த்தகர் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக தனது தந்தை ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 13ஆம் திகதி தனது தந்தையின் வீட்டை சோதனையிட்டு இரண்டு துப்பாக்கிகளை பொலிஸார் கண்டுபிடித்ததாகவும், அந்த துப்பாக்கிகளுக்கு சட்டபூர்வமான அனுமதிப்பத்திரங்கள் இருந்தபோதிலும், சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததாக ஊடகங்கள் மூலம் தவறான பிரச்சாரம் செய்யப்பட்டதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டுகிறார். மேலும், கொழும்பு குற்றப் பிரிவின் அறிவிப்பின் பேரில் தான் பல சந்தர்ப்பங்களில் அங்கு சென்று வாக்குமூலங்களை அளித்ததாகவும் அவர் கூறுகிறார்.
அவ்வாறு வாக்குமூலம் அளிக்கச் சென்ற சந்தர்ப்பங்களில், தாய்லாந்தில் தங்கியிருப்பதாகக் கூறப்படும் ‘கெஹெல்பத்தார பத்மே’ என்பவருடன் தனக்கு தொடர்பு இருந்ததா என்று தன்னிடம் கேள்வி கேட்கப்பட்டதாகவும், அந்தக் கேள்விகள் மிகவும் அச்சுறுத்தும் விதத்தில் இருந்ததாகவும் மனுதாரர் குற்றம் சாட்டுகிறார். தற்போதைய சூழ்நிலையில், தன்னை எந்த நேரத்திலும் கைது செய்யப்படக்கூடிய கடுமையான ஆபத்து இருப்பதால், அந்தக் கைது நடவடிக்கையைத் தடுக்கும் நிவாரண உத்தரவை பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளார்.
நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் சட்டத்தரணி அமில குமாரவின் அறிவுறுத்தலின் பேரில் சட்டத்தரணி ருக்ஷான் சேனாதிர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் ஆஜராகினர். சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி அகிலா தல்பதாது வாதிட்டார்.