இலங்கை இணைய மோசடிகளுக்கான மையமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும், இதுவரை சூதாட்ட ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையை செயற்படுத்துவதற்கான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளத் தவறிவிட்டது. நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத இணையவழி மற்றும் பௌதீக விளையாட்டு நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் பெருமளவில் இழக்கப்படுவதாக அரச நிதி பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.
இந்தக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, சூதாட்ட ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையை செயற்பாட்டு நிலைக்கு கொண்டு வருவதற்கான ஒழுங்குபடுத்தல்களை நடைமுறைப்படுத்தாததற்கான காரணங்கள் குறித்து அதிகாரசபை அதிகாரிகளிடம் வினவினார். ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் பல கட்டங்களாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், முதல் கட்ட ஒழுங்குபடுத்தல்கள் 2026 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இதுவரை எந்தவொரு ஒழுங்குபடுத்தலும் அமுல்படுத்தப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. சூதாட்டங்கள் உட்பட விளையாட்டு வணிகங்களை இயக்குவதற்கான தொடர்புடைய ஒழுங்குபடுத்தல் வரைவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிங்கப்பூர் உட்பட மூன்று நாடுகளில் உள்ள அமைப்புகளை மாதிரியாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஒழுங்குபடுத்தல்கள் தற்போது ஒரு நிபுணர் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த ஒழுங்குபடுத்தல்கள் மூலம் உரிமம் வழங்குதல், இணையவழி விளையாட்டுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பணமோசடி தடுப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இந்தத் துறையை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்காக ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு நிபுணர் அடுத்த மாதம் நாட்டிற்கு வரவுள்ளார், மேலும் பணமோசடி தடுப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய வசதிகள் மையத்தின் உதவியும் பெறப்படவுள்ளது.