மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால், இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை, மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்கவினால் நேற்று (21) மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜராகாத இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகச் சந்தேகிக்கப்படும் 60 மில்லியன் ரூபாவை முதலீடு செய்து மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் (எளியாகந்த) பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பை வாங்கிய சம்பவம் தொடர்பில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட முந்தைய சந்தர்ப்பத்திலும் சந்தேகநபர் ஆஜராகாததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில், முன்னாள் அமைச்சருக்காகப் பிணை வழங்கிய நான்கு பிணையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்த பிரதான நீதவான், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தவறினால் பிணைப்பணத்தைப் பறிமுதல் செய்யாததற்கான காரணங்களைக் குறிப்பிடுமாறு கடுமையாக அறிவுறுத்தினார்.
காலை 10.00 மணியளவில் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, நிதி மோசடிப் பிரிவின் அதிகாரிகளுடன் முறைப்பாடு சார்பாக ஆஜரான அரச சட்டத்தரணி நாலக கொத்தலாவல, இந்த வழக்கில் மூன்றாவது சந்தேகநபரான பஸில் ராஜபக்ஷ மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்து தொடர்ந்து நீதிமன்றத்தை புறக்கணித்து வருவதாகக் குறிப்பிட்டார். இந்த வேண்டுமென்றே புறக்கணிப்புக்கு எதிராக அவருக்குப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மேலும் நீடிக்குமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரினார்.
அதற்குப் பதிலளித்த சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா, தனது கட்சிக்காரர் நீதிமன்றத்தை புறக்கணிக்கும் எந்த நோக்கத்திலும் இல்லை என்று தெரிவித்தார். அவர் வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், உடல்நிலை சீரடைந்தவுடன் நீதிமன்றத்தில் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி, சம்பந்தப்பட்ட மருத்துவ அறிக்கைகளைச் சமர்ப்பித்து பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரினார்.
இதன்போது இரு தரப்பினரின் வாதப் பிரதிவாதங்களையும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சமர்ப்பிப்புகளுக்கு பிரதிவாதி தரப்பு தெரிவித்த கடுமையான எதிர்ப்பையும் கருத்தில் கொண்ட பிரதான நீதவான், மூன்றாவது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை பிடியாணையை இரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று சுட்டிக்காட்டினார். 11 வருடங்களாக விசாரணையில் உள்ள இந்த வழக்கில் மூன்றாவது சந்தேகநபரான பஸில் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான பிடியாணையை இரண்டாவது முறையாக நீடித்த நீதவான், அடுத்த வழக்கு தினத்தில் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை வழங்குமாறும், சந்தேகநபரின் அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் சமர்ப்பிக்குமாறும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரதிவாதிகள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா உட்பட ஒன்பது சட்டத்தரணிகள் கொண்ட குழு ஆஜரானது.