மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் எழுத்துமூல மற்றும் நடைமுறைப் பரீட்சைகளில் தோற்றாமல் சட்டவிரோதமான முறையில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிலாபம் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அமில சந்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி காலை சிலாபம் பண்டாரவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தின் பின்னரே இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற சிறிய ரக லொறி ஒன்று அதே திசையில் சென்ற சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறியை 19 வயது இளைஞன் ஓட்டிச் சென்றுள்ளான். விபத்தில் பலத்த காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லொறி சாரதிக்கு தூக்கம் வந்ததே விபத்துக்கு காரணம் என பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து, லொறியை ஓட்டியவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பொலிஸ் அதிகாரிகள் பரிசோதித்தபோது சந்தேகம் ஏற்பட்டு, விசாரித்தபோது அந்த அனுமதிப்பத்திரம் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நடைமுறைப் பரீட்சையில் தான் தோற்றியதாகவும், அந்தப் பரீட்சையில் தோல்வியடைந்ததால் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான தேவை அதிகமாக இருந்ததால், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் ஒருவரிடம் எந்தப் பரீட்சையிலும் தோற்றாமல் 35,000 ரூபாய் கொடுத்து சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்தப் பணம் 10,000 ரூபாயும் 25,000 ரூபாயும் என இரண்டு சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர். விபத்துக்குள்ளான லொறி கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், சந்தேகநபரான இளைஞன் சில வாரங்களுக்கு முன்புதான் லொறி சேவைக்குச் சென்றார் என்றும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சாரதி சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருந்தார்.
சிலாபம் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அமில சந்தனவின் அறிவுறுத்தலின் பேரில், பொலிஸ் கான்ஸ்டபிள்களான (100711) வைத்தியரத்ன, (9100) பிரசாத் ஆகியோர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.