தனது சொந்த இரத்த உறவுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் ஒரு தந்தைக்கு விதிக்கப்பட்ட 15 வருட கடூழியச் சிறைத் தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நீதிபதிகள் அமல் ரணராஜ மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், சம்பந்தப்பட்ட பிரதிவாதி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த பின்னர் அதனை நிராகரித்து இந்த உத்தரவை பிறப்பித்தது.
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் தனது மகளை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரதிவாதிக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. நீண்ட விசாரணையின் பின்னர், தண்டனைச் சட்டக்கோவையின் 364(3) பிரிவின் கீழ் முன்வைக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டில் மாத்திரம் பிரதிவாதியை குற்றவாளியாகக் காண ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் 2025 ஜூலை 16 அன்று தீர்ப்பளித்ததுடன், மற்ற இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேற்படி மேல் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரதிவாதிக்கு 15 வருட கடூழியச் சிறைத் தண்டனையுடன் 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டதுடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மகளுக்கு 400,000 ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது. அத்துடன், அபராதத் தொகையையோ அல்லது நஷ்டஈட்டுத் தொகையையோ செலுத்தத் தவறினால், அதற்குப் பதிலாக மேலதிகமாக ஆறு மாத கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
குற்றம் நடந்த சரியான திகதிகளை உறுதிப்படுத்த முறைப்பாடு தவறியமை, பாதிக்கப்பட்டவரின் சாட்சியங்களில் உள்ளதாகக் கூறப்படும் சிக்கலான தன்மை, வழிகாட்டும் கேள்விகளைப் பயன்படுத்தியமை மற்றும் தன்னால் செய்யப்பட்ட சத்தியப்பிரமாணம் செய்யப்படாத அறிக்கையை பரிசீலித்த விதம் ஆகிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பிரதிவாதி மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக இந்த மேன்முறையீட்டை தாக்கல் செய்திருந்தார்.
எனினும், பிரதிவாதி தரப்பு முன்வைத்த அனைத்து வாதங்களையும் நிராகரித்து தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கலாநிதி சுமுது பிரேமச்சந்திர, முறைப்பாடு முன்வைத்த விடயங்கள் அதிக நிகழ்தகவு கொண்டவை என்று குறிப்பிட்டார். மேல் நீதிமன்ற நீதிபதி எட்டிய முடிவுகளில் தலையிட எந்த சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை என்று சுட்டிக்காட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றம், 2025 ஜூலை 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சம்பந்தப்பட்ட சிறைத் தண்டனை, அபராதம் மற்றும் நஷ்டஈடு செலுத்தும் உத்தரவு மாற்றங்கள் இன்றி அமுல்படுத்தப்படும் என்று உத்தரவிட்டது.