2027 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி (Miss Universe 2027) போட்டித் தொடரை இலங்கையில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரபஞ்ச அழகி அமைப்பின் உலகளாவிய கூட்டாண்மைக்கான துணைத் தலைவரும், பிலிப்பைன்ஸ்-அமெரிக்க தொழில்முனைவோரும், தோல் பராமரிப்பு நிபுணருமான திருமதி ஒலிவியா குய்டோ-கோ (Olivia Quido-Co), வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜயத ஹேரத் அவர்களைச் சந்தித்துள்ளார். இவ்வாறான ஒரு நிகழ்ச்சி மூலம் இலங்கைக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் பெறுமதிகள் குறித்து அங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்த விசேட சந்திப்பை 2020 ஆம் ஆண்டுக்கான உலக அழகி (Mrs World 2020) பட்டத்தை வென்ற திருமதி கரோலின் ஜூரி ஏற்பாடு செய்திருந்தார். பிரபஞ்ச அழகி போன்ற சர்வதேச அளவில் முன்னணி தளமொன்றின் மூலம் இலங்கைக்கு உயர் உலகளாவிய ஈர்ப்பைப் பெற்றுத்தர முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும், சுற்றுலா, விருந்தோம்பல், விமான சேவைகள், ஃபேஷன், நிகழ்வு ஏற்பாடுகள், சில்லறை வர்த்தகம் மற்றும் அது தொடர்பான பல துறைகளில் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இவ்வாறான ஒரு நிகழ்வின் மூலம் பாரிய சர்வதேச ஊடக வெளிச்சம் மற்றும் விசேட டிஜிட்டல் விளம்பரம் கிடைக்கும் என்பதால், இலங்கையின் தனித்துவத்தை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் திறம்பட வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் திருமதி கரோலின் ஜூரி மேலும் குறிப்பிட்டார். இது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் சர்வதேச அளவிலான ஒரு மாபெரும் நிகழ்வை நடத்துவதற்கு இலங்கை மிகுந்த ஆர்வம் காட்டுவதாக அமைச்சர் விஜயத ஹேரத் இங்கு தெரிவித்தார்.
