விசாக்களுக்காக போலி ஆவணங்களைத் தயாரிக்க 48 கடவுச்சீட்டுகளை தன்வசம் வைத்திருந்த நிலையில் பிடிபட்டார்

48-passports-seized-to-make-fake-documents-for-visas

வெளிநாட்டு வீசா அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் மோசடி நடவடிக்கைகளுக்காக, 48 பிறரின் கடவுச்சீட்டுகளை தனது வசம் வைத்திருந்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் அலுவலக உதவியாளர் ஒருவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 70 வயதுடைய ஒருவராவார்.

சோதனையின் போது சந்தேகநபரிடமிருந்து கடவுச்சீட்டுகள் மற்றும் பணத்தாள்களில் உள்ள நீர் அடையாளங்களைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் 'பிளிஸார்ட் கேஷ் டெக்னாலஜி' (Blizzard cash technology) வகை கண்டறியும் கருவி ஒன்றும், ஒரு ஸ்மார்ட் கைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.




கடுவலை, இஹல பொமிரிய, ரன்மல் மாவத்தையில் அமைந்துள்ள ஒரு வீட்டிலிருந்து ஒருவர் தூதரகங்கள் ஊடாக போலியான வீசாக்களைப் பெற்றுக்கொள்வதற்காக போலி ஆவணங்களைத் தயாரிப்பதாக நவகமுவ பொலிஸுடன் இணைக்கப்பட்ட பிரிவுக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் (101998) அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் சுமார் ஐந்து வருடங்களாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது. பின்னர் பத்தரமுல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றில் பணியாற்றிய சந்தேகநபர், அந்த நிறுவனத்தில் பணியாற்றிய காலப்பகுதியிலேயே குறித்த கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.




சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரங்களில் வெளிநாடு செல்ல விரும்பும் நபர்கள் இதற்கு முன்னரும் வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளதாக தூதரகங்களுக்குக் காட்டுவதற்காக சந்தேகநபரால் இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அவர் பழைய கடவுச்சீட்டுகளில் உள்ள வீசா பகுதிகளை மிகவும் சூட்சுமமாக அகற்றி புதிய கடவுச்சீட்டுகளில் ஒட்டி வழங்கியுள்ளதுடன், அதற்காக ஒரு நபரிடமிருந்து 20,000 ரூபாய் அறவிட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், கைப்பற்றப்பட்ட கடவுச்சீட்டுகளில் சுமார் 15 கடவுச்சீட்டுகளில் இருந்த வீசா பகுதிகள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சந்தேகநபர் கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post