குருணாகல் பிரதான கலவன் பாடசாலையொன்றில் ஒன்பதாம் வகுப்பில் கல்வி கற்கும் 14 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 52 வயதுடைய விஞ்ஞானப் பாட ஆசிரியரொருவர் குருணாகல் தலைமையகப் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மல்கடுவாவ, நந்தன மாவத்த பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்த சந்தேகநபரான ஆசிரியர் கடந்த 30ஆம் திகதி இவ்வாறு பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற இந்த துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் குறித்த மாணவி தனது பெற்றோரை அறிவித்த பின்னர், அவர்கள் பாடசாலை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இருப்பினும், பாடசாலை அதிகாரிகள் குறித்த ஆசிரியரைப் பாதுகாக்கும் வகையில் செயற்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பின்னர் குருணாகல் வலயக் கல்வி அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சந்தேகநபர் குருணாகல் பிரதேசத்திலேயே அமைந்துள்ள வேறொரு சிறிய பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்று இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் குறித்த ஆசிரியருக்கு எதிராக அதிகாரிகள் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காததால், மாணவியின் தந்தை கடந்த 25ஆம் திகதி குருணாகல் தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அதன் மூலம் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேகநபரான ஆசிரியரை இவ்வாறு கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேகநபர் இதற்கு முன்னர் குருணாகல் நகரில் அமைந்துள்ள வேறொரு பிரதான கலவன் பாடசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த போதும் இதேபோன்று ஒரு மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் குறித்த மாணவியின் வயது 18ஐத் தாண்டியிருந்ததால், அவரது எதிர்காலத்தைக் கருதி பெற்றோரின் சம்மதத்துடன் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன் அவர் தற்போதைய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் குருணாகல் வலயக் கல்வி அலுவலகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வடமேல் மாகாண சபையின் கல்வி அமைச்சு அறிக்கை கோரியுள்ளது. குருணாகல் மாவட்டப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த சி. பல்லேவெலவின் அறிவுறுத்தலின் பேரில், குருணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸ விதானகேவின் வழிகாட்டலில், குருணாகல் தலைமையகப் பிரதான பொலிஸ் பரிசோதகர் தம்ம சன்னக்க கொப்பேவல உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.