
மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த தியகமவில் அமைந்துள்ள தொழில்நுட்ப பீடத்தின் விடுதி வளாகத்தில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக இரண்டாம் ஆண்டு மாணவர்கள் எட்டு பேர் கஹதுடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதிக்கு அருகில் இரவு நேரத்தில் தங்கியிருந்ததை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட சூடான வாக்குவாதம் முற்றியதால் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குறித்த பீடத்தின் இயந்திரப் பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி கற்கும் 23 வயதுடைய மாணவர்கள் ஆவர். இவர்கள் ரக்வானை, பஸ்ஸறை, ஹிக்கடுவ, மினுவாங்கொடை, அம்பாறை, அனுராதபுரம், உடுகங்வில மற்றும் வெலிபென்ன ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் இரண்டு விடுதிகளுக்கு இடையில் அமைந்துள்ள "சிரோ லெவல்" எனப்படும் பொது இடத்திற்கு வெளி மாணவர்கள் வருவது இரண்டாம் ஆண்டு மாணவர்களால் தடை செய்யப்பட்டிருந்தது. தாக்குதலுக்கு உள்ளான முதலாம் ஆண்டு மாணவர் இரவு 11.15 மணியளவில் அந்த இடத்தில் தங்கியிருந்து தொலைபேசி அழைப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர் அவரிடம் விசாரித்து இவ்வாறு தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்கிய மாணவர்களில் ஒருவரும் தன்னைத் தாக்கியதாகக் கூறி மறுநாள் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹோமாகம ஆதார வைத்தியசாலை பொலிஸார் அளித்த தகவலின்படி, கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு இந்த சந்தேகத்திற்குரிய எட்டு மாணவர்களையும் கைது செய்துள்ளனர்.