மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலையின் அடிப்படையில், கொழும்புக்கும் துபாய்க்கும் இடையிலான தனது விமானச் சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கு FitsAir நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் 6ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இத்தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை மற்றும் அது தனது விமானச் சேவைகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தொடர்ச்சியாக ஆராய்ந்து வருவதாக குறித்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய திட்டங்களின்படி, எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி முதல் விமானச் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதே FitsAir இன் எதிர்பார்ப்பாகும். இருப்பினும், அந்த திகதிக்குள் பிராந்தியத்தில் நிலவும் நிலைமை மற்றும் எதிர்கால முன்னேற்றங்களைப் பொறுத்து இந்த முடிவு மீண்டும் மாறக்கூடும் என்றும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
இந்த சேவை இடைநிறுத்தத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் மற்றும் இடையூறுகளுக்கு FitsAir நிறுவனம் வருத்தம் தெரிவிப்பதுடன், இவ்வாறான சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் காட்டிய ஒத்துழைப்பு, பொறுமை மற்றும் புரிதலுக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.