தெஹிவளை கௌடான, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்த சோக சம்பவம் தொடர்பில் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) தனது ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ‘X’ கணக்கில் விசேட குறிப்பொன்றை இட்டுள்ள அவர், எந்தவொரு குழந்தையும் இத்தகைய கொடூரமான வன்முறைச் செயல்களுக்கு பலியாகக் கூடாது என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றத்திற்குப் பொறுப்பான அனைவரும் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய வதிவிடப் பிரதிநிதி, அகால மரணமடைந்த குழந்தைகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அதிகாலை வேளையில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல், முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத ஒருவரால் நடத்தப்பட்டு அவர் தப்பிச் சென்றது அருகிலுள்ள பாதுகாப்பு CCTV கமெராக்களில் பதிவாகியுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் இரு மகன்களும் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தெஹிவளை சாஸ்திரானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்ற 11 வயது துமிந்து கிஹான் மற்றும் 17 வயது கசுன் ரஷ்மிகா ஆகிய இரு சகோதரர்களும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் கால்களில் பலத்த காயமடைந்த 55 வயது தந்தை தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.