அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் முழுமையான மாற்றம் இல்லாமல் ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் வலியுறுத்தியதாவது, கடந்தகாலத்தில் நிலவிய காலாவதியான அரசியல் முறைகள் நவீன காலத்திற்கு ஒருபோதும் பொருந்தாது.
கடந்தகாலத்தில் அரசியல்வாதிகள் மக்களுக்கு மேலாக ஆட்சி செய்து வந்ததாகவும், சாதாரண மக்கள் பயத்துடனும் பணிவுடனும் ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், ஒரு வெற்றிகரமான பயணத்திற்கு அரசியல் தலைமைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நெருக்கமான மற்றும் நல்ல உறவு இருப்பது அத்தியாவசியமான காரணி என்றும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
தந்தை ஜனாதிபதியாக இருப்பதால் மகனும் அந்தப் பதவிக்கு வர வேண்டும் என்ற குடும்பவாத சிந்தனை கடந்தகால அரசியல் கலாச்சாரத்தின் ஒரு அம்சம் என்றும், நவீன ஜனநாயக அரசியலுக்கு அது பொருந்தாது என்றும் அவர் விளக்கினார். இத்தகைய குடும்பங்களை வளர்க்கும் அரசியல் சகாப்தம், இநாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த நிலையில், 2024 செப்டம்பர் 21 அன்று இநாட்டு மக்களால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.