45 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் அமுலில் இருந்த 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்து தயாரிக்கப்பட்ட 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' அரசாங்கத்தினால் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய சட்டமூலம், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குறித்த தினத்திலிருந்து அமுலுக்கு வரவுள்ளது.
இலங்கையர்கள், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள இராஜதந்திர சொத்துக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்க பயங்கரவாதக் குற்றங்கள், விசாரணைகள், தடுத்துவைப்புகள் மற்றும் வழக்குத் தொடர்வதற்கான புதிய சட்டக் கட்டமைப்பு இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் அல்லது ஏதேனும் சித்தாந்த நோக்கத்திற்காக பொதுமக்களை அச்சுறுத்துவதற்கோ அல்லது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கோ மேற்கொள்ளப்படும் கொலைகள், கடுமையான காயங்களை ஏற்படுத்துதல், பணயக்கைதிகளாக வைத்திருத்தல், உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் சேதங்கள் அத்துடன் இணையத் தாக்குதல்களும் இங்கு பயங்கரவாதக் குற்றங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், அமைதியான முறையில் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையைப் பாதுகாப்பதற்காக விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, அமைதியான போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் உள்ளிட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள், மனிதாபிமான உதவிகளை வழங்குதல் அத்துடன் ஊடகவியலாளர்களின் நியாயமான அறிக்கையிடல், அரசியல் விமர்சனங்கள், கருத்து வெளியீடுகள் மற்றும் கல்வி அல்லது ஆராய்ச்சி நடவடிக்கைகள் எந்த வகையிலும் பயங்கரவாதக் குற்றங்களாகவோ அல்லது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவோ கருதப்பட மாட்டாது என 4(4) ஆம் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
சந்தேகநபர்களைக் கைது செய்வதிலும் விசாரணைகளை மேற்கொள்வதிலும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்ட 48 மணித்தியாலங்களுக்குள் அருகிலுள்ள நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், கைது செய்யப்பட்டமை குறித்து 24 மணித்தியாலங்களுக்குள் நெருங்கிய உறவினருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் எழுத்து மூலம் அறிவிப்பது கட்டாயமாகும். அத்துடன், விசாரணைகள் ஒலி-காட்சி (Audio-Visual) தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுடன், நீதவான்களுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் முன் அறிவித்தல் இன்றி தடுப்புக்காவல் நிலையங்களை கண்காணிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தடுத்துவைப்புக் காலங்கள் தொடர்பாகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் வழங்கப்படும் தடுப்புக்காவல் உத்தரவு ஒரு தடவைக்கு இரண்டு மாதங்களுக்கு மேற்படக்கூடாது என்பதுடன், மொத்த தடுத்துவைப்புக் காலம் அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு மேல் தடுத்துவைப்பதற்கு உயர் நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும். மேலும், தடுப்புக்காவல் உத்தரவுகளின் சட்டபூர்வமான தன்மையை பரிசீலிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற அல்லது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியொருவரின் தலைமையில் 'சுதந்திரமான மீளாய்வுக் குழு' ஒன்றை ஸ்தாபிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட தடுப்புக்காவலர்கள் அக்குழுவிடம் நிவாரணம் கோர முடியும்.
ஒரு சந்தேகநபர் நீதவான் முன்னிலையில் வழங்கும் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்றுக்கொள்வதற்கு, குறித்த வாக்குமூலத்திற்கு முன்னரும் பின்னரும் சட்ட மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது கட்டாயமாகும். ஒரு சந்தேகநபர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சையளிக்க, இடமாற்றம் செய்ய மற்றும் பொலிஸ்மா அதிபரைக் கொண்டு விசாரணைகளை மேற்கொள்ள நீதவானுக்கு அதிகாரங்கள் உள்ளன.
தண்டனைகளை விதிக்கும்போது, பயங்கரவாதத் தாக்குதலால் மரணத்தை ஏற்படுத்திய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். ஏனைய கடுமையான குற்றங்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு உதவுதல் அல்லது நிதியளித்தல் போன்றவற்றுக்கு 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனையும் 20 மில்லியன் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படலாம். இருப்பினும், மரணங்கள் அல்லது கடுமையான சேதங்கள் ஏற்படாத சந்தர்ப்பங்களில், சட்டமா அதிபரின் ஒப்புதல் மற்றும் உயர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் பகிரங்க மன்னிப்பு கோருதல், புனர்வாழ்வு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் போன்ற நிபந்தனைகளின் பேரில் வழக்குத் தொடர்வதை ஒத்திவைக்க அல்லது இடைநிறுத்தவும் புதிய சட்டமூலம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.