பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தெகொட நேற்று (24) கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வாவிடம் தெரிவித்தார்.
நேற்று காலை மகரகம அப்பேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு தேரரின் நலன் விசாரித்த பின்னர், அலுத்கடை நீதிமன்றத்திற்கு வந்துகொண்டிருந்த ஞானசார தேரர், நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள பெரேரா அண்ட் சன்ஸ் (P&S) உணவகத்தில் உணவு உட்கொண்டிருந்தபோது மயக்கமடைந்துள்ளார். இதன் காரணமாக உடல்நலக் குறைவால் அவரால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், அவருடன் வந்த விஹாரகல விஜேத்த தேரரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இந்த நிலையை உறுதிப்படுத்தினார்.
இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட ஒன்பது மாத சிறைத்தண்டனையை அமுல்படுத்தாததற்கு ஏதேனும் காரணம் இருந்தால், அது குறித்து அடுத்த மாதம் 01 ஆம் திகதி விளக்கமளிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா உத்தரவிட்டார். குறித்த முறைப்பாடு அழைக்கப்பட்டபோது, பிரதிவாதியான ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தெகொட உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு முன்வைத்த விடயங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும், பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் உரிய சட்டப்பூர்வ விடயங்களை சமர்ப்பிக்குமாறும் நீதவான் தெரிவித்தார். பிரதிவாதி தேரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியுடன், சட்டத்தரணி குணரத்ன வன்னினாயக்க மற்றும் சட்டத்தரணி சஞ்சீவ அன்டனி ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்த வழக்குக்கு அடிப்படையாக அமைந்தது, 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிருளப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசார தேரர் இஸ்லாம் மதம் குறித்து வெளியிட்ட கருத்து. "இஸ்லாம் ஒரு புற்றுநோய்" என்றும் அதை "துடைத்தெறிய வேண்டும்" என்றும் அவர் வெளியிட்ட கருத்துக்கள் மூலம் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டி, தண்டனைச் சட்டக்கோவையின் 291 வது பிரிவின் கீழ் கொழும்பு குற்றப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி பொலிஸாரால் இந்த வழக்கு தொடரப்பட்டது.
அங்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவருக்கு 9 மாதங்கள் இலேசான வேலைகளுடன் கூடிய சிறைத்தண்டனையும், 1500 ரூபாய் அபராதமும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார். குறித்த மேன்முறையீடு பரிசீலிக்கப்படும் வரை தண்டனையை அமுல்படுத்துவதை இடைநிறுத்துமாறும் அவர் நீதிமன்றத்தில் கோரினார். உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கு 2027 பெப்ரவரி 23 ஆம் திகதி அழைக்கப்பட தற்போது திகதி குறிக்கப்பட்டுள்ளது.