ஆஸ்திரேலிய விமான நிறுவனமான Qantas, 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சிட்னியிலிருந்து நியூயோர்க்கிற்கு 18 மணிநேர நேரடி விமான சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. 'Project Sunrise' திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் இந்த இரண்டாவது மிக நீண்ட தூர விமானப் பாதை, பயணிகளின் பயண நேரத்தை சுமார் மூன்று மணிநேரம் குறைக்கும்.
இது சிட்னியில் உள்ள கிங்ஸ்ஃபோர்ட்-ஸ்மித் விமான நிலையத்திலிருந்து நியூயோர்க்கில் உள்ள ஜான் எஃப். கென்னடி (JFK) விமான நிலையம் வரை இயக்கப்படும் முதல் வணிக நேரடி விமானமாக இருக்கும். இந்த திட்டத்தின் முதல் கட்டமான சிட்னியிலிருந்து லண்டனுக்கான நேரடி விமானம், பல தாமதங்களுக்குப் பிறகு அடுத்த ஆண்டு அக்டோபரில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது Qantas விமான நிறுவனம் சிட்னியிலிருந்து நியூயோர்க்கிற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் வழியாக விமானங்களை இயக்குகிறது, இதற்கு சுமார் 21 மணிநேரம் ஆகும் மற்றும் ஒரு பயணத்திற்கு 1,000 பவுண்டுகளுக்கு மேல் வசூலிக்கப்படுகிறது. புதிய திட்டத்தின் விமான டிக்கெட் விலைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இது வழக்கமான விமான கட்டணங்களை விட சுமார் 20% அதிகமாக இருக்கலாம் என்று விமான நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
சிட்னியிலிருந்து நியூயோர்க் விமானத்திற்கான டிக்கெட்டுகள் 2027 ஆகஸ்டில் விற்பனைக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் 2022 இல் தொடங்க திட்டமிடப்பட்ட லண்டன்-சிட்னி விமானம் உலகளாவிய தொற்றுநோய் மற்றும் உற்பத்தி தாமதங்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நீண்ட தூர விமானங்களுக்காக Qantas, கூடுதல் எரிபொருள் தொட்டிகளுடன் கூடிய 12 ஏர்பஸ் (Airbus) A350-1000ULR ரக விமானங்களை ஆர்டர் செய்துள்ளது, அவை ஒரே நேரத்தில் 10,000 மைல்களுக்கு மேல் மற்றும் 22 மணிநேரம் வரை இடைவிடாமல் பறக்கும் திறன் கொண்டவை.
இதன் முதல் விமானம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வரவுள்ளது. கடந்த ஜூலை மாதம் மெல்போர்னிலிருந்து பிரான்சின் டூலூஸில் உள்ள ஏர்பஸ் தொழிற்சாலைக்கு 24 மணிநேர சோதனை விமானம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது, இது வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட வணிக விமானமாகக் கருதப்படுகிறது. இந்த விமானங்களில் பயணிகளின் ஓய்வுக்காக ஒரு சிறப்புப் பகுதி (well-being zone) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது எகானமி (economy) மற்றும் பிரீமியம் எகானமி (premium economy) வகுப்புப் பிரிவுகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பயணிகள் உடற்பயிற்சி செய்ய, உடற்பயிற்சி வீடியோக்களைப் பார்க்க, அத்துடன் சிற்றுண்டிகள் மற்றும் பானங்களைப் பெறவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு விமானத்திலும் மொத்தம் 238 இருக்கைகள் உள்ளன, இதில் 140 ஸ்டாண்டர்ட் எகானமி வகுப்பு இருக்கைகள், 6 முதல் வகுப்புப் பிரிவுகள், 52 பிசினஸ் வகுப்புப் பிரிவுகள் மற்றும் 40 பிரீமியம் எகானமி வகுப்பு இருக்கைகள் அடங்கும்.
'Project Sunrise' திட்டம் மற்றும் அதன் மூலம் அதிகரிக்கும் பிரீமியம் விமானப் பயணங்களுக்கான தேவை காரணமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் 215 மில்லியன் பவுண்டுகள் அதிகரிக்கும் என்று Qantas எதிர்பார்க்கிறது, மேலும் லாப வரம்பு 4% முதல் 10% வரை வளரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுக்காக உலகத் தலைவர்கள் நியூயோர்க்கில் கூடியிருந்த சந்தர்ப்பத்தில், Qantas இன் தலைமை நிர்வாக அதிகாரி வனேசா ஹட்சன், நியூயோர்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்த நேரடி விமான சேவையைத் தொடங்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நியூயோர்க்கிற்கு இடைவிடாமல் பறப்பது பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதாகவும், இது ஆஸ்திரேலியர்களின் பயண முறையை மாற்றும் என்றும் அவர் கூறினார். நிறுவனம் தற்போது தனது பொறியாளர்களுக்கும் விமானிகளுக்கும் புதிய விமானம் குறித்து A350 சிமுலேட்டர்கள் மூலம் பயிற்சி அளித்து வருகிறது.