இலங்கை உட்பட தெற்காசியப் பிராந்தியத்தில் மனநலம் தொடர்பான நிலைமை தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் ஐவரில் ஒருவர் மட்டுமே மருத்துவ சிகிச்சைக்காகச் செல்கிறார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இத்தகைய நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலானோர் தொழில்முறை மருத்துவ உதவியைப் பெறுவதை விட அதைத் தவிர்ப்பதற்கே அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தெரிகிறது.இந்த விடயங்களை விசேட மனநல வைத்தியர் விந்தியா விஜயபண்டார அம்மையார் வெளிப்படுத்தினார். வரவிருக்கும் உலக மனநல தினத்தை முன்னிட்டு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நேற்று (08) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு வைத்தியர் இதனைச் சுட்டிக்காட்டினார்.
சிகிச்சையைப் பெறுவதைத் தவிர்க்க நோயாளிகள் தயங்குவதற்கு சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் மனப்பான்மைகளே மிக முக்கியமான காரணமாகும். ஆய்வுத் தரவுகளின்படி, மனநல நோய்கள் தொடர்பான சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்களும் அதனுடன் தொடர்புடைய களங்கமும் சிகிச்சையைத் தவிர்ப்பதற்கு முக்கியமாகப் பங்களித்துள்ளன. இதனால், சமூகத்தை அறிவூட்டுவதன் மூலமும், களங்கத்தைக் குறைப்பதன் மூலமும், பொருத்தமான சிகிச்சைகளுக்கான அணுகலை உறுதிப்படுத்துவதன் மூலமும் மக்கள் சரியான மருத்துவ உதவியைப் பெற ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று விசேட மனநல வைத்தியர் இங்கு மேலும் வலியுறுத்தினார்.
இத்தகைய பின்னணியில், மனநலப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும் தேசிய உதவிச் சேவையும் நிறுவப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு உலக மனநல தினத்துடன் இணைந்து தொடங்கப்பட்ட '1926' தேசிய மனநல உதவிச் சேவை தற்போது ஒரு பெரிய பங்கை வகித்து வருகிறது. பொதுமக்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கும் இச்சேவை, ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான தொலைபேசி உரையாடல்களுக்கு வசதி செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மனநல சேவைகளையும் அது குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதற்காக, மனநோயாளிகளின் உண்மையான அனுபவங்களைக் கேட்பதும் அவர்களின் குரலுக்கு உரிய கவனம் செலுத்துவதும் இங்கு வலியுறுத்தப்பட்டது. இதை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் வகையில், வரவிருக்கும் அக்டோபர் 10 ஆம் திகதி அனுசரிக்கப்படும் இந்த வருட உலக மனநல தினத்தின் கருப்பொருள் "உண்மையான அனுபவங்களைக் கேட்டல்: உண்மையான குரல்கள், உண்மையான மாற்றம்" என்பதாகும்.