வெளிநாட்டில் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தனது நாட்டுப் பிரஜை ஒருவருக்கு இராஜதந்திர மட்டத்தில் வழங்கக்கூடிய மிக உயர்ந்த ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் வகையில், சவுதி அரேபியாவின் தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவின் நலன் விசாரிப்பதற்காக அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதுவர் ஓ. எல்.
அமீர் அஜ்வாட் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த 8ஆம் திகதி குறித்த சிறைச்சாலைக்குச் சென்ற தூதுவர், அனோஜனுடன் அவரது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளார். அங்கு வெறும் உத்தியோகபூர்வ சந்திப்புடன் மட்டும் நின்றுவிடாத தூதுவர், எதிர்காலத்தில் நேரடியாக தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக தனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட தகவல்களையும் அவருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.இந்த சந்திப்பு தொடர்பாக ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதுடன், அனோஜன் சிவராசாவுக்காக அரசாங்கத்தின் தலையீடு அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அறிவுறுத்தலின்படி அவருக்குத் தேவையான அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் வழங்க இலங்கைத் தூதரகம் கடமைப்பட்டுள்ளது என தூதுவர் அமீர் அஜ்வாட் அவர்கள் அங்கு அவருக்கு உறுதியளித்துள்ளார்.
சிறைக்காவலில் இருந்தாலும், அனோஜன் சிவராசா தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக இந்த சந்திப்புக்குப் பிறகு கருத்துத் தெரிவித்த தூதுவர் உறுதிப்படுத்தினார். சிறைச்சாலை அதிகாரிகளும் அவரது நலன் குறித்து உரிய கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், அனோஜன் சிவராசா சவுதி உச்ச நீதிமன்றத்தில் தற்போது சமர்ப்பித்துள்ள மேன்முறையீட்டு செயல்முறைக்காகவும் தூதரகம் ஊடாக தொடர்ச்சியாக தேவையான சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக குறித்த அறிவிப்பில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.