இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா இன்று (அக்டோபர் 08, 2026) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனது தலைமைப் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். "தலைமைப் பொறுப்பை அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்பது எனது நேர்மையான நம்பிக்கை," என்று தேசிய தெரிவுக் குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா, தனஞ்சயவின் முடிவுக்கு பதிலளித்து, டெஸ்ட் அணிக்கு அவர் வழங்கிய தலைமைத்துவத்திற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்டன், அவரது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 35 வயதான தனஞ்சய ஒரு சாதாரண வீரராக அணியைப் பிரதிநிதித்துவப்படுத்த தொடர்ந்து தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதிப்படுத்தியது. இருப்பினும், புதிய டெஸ்ட் தலைவர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த திடீர் ராஜினாமாவுக்குப் பின்னால், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு அவருக்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தனஞ்சயவின் தலைமைத்துவம் குறித்து தெரிவுக் குழுவில் அதிருப்தி நிலவியதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக தலைமைத்துவத்தில் மாற்றம் செய்ய அவர்கள் எதிர்பார்த்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியத் தொடரில் துணைத் தலைவராக இருந்த கமிந்து மெண்டிஸ் அல்லது தற்போதைய வெள்ளைப்பந்துத் தலைவர் குசல் மெண்டிஸ் அடுத்த டெஸ்ட் தலைவராக நியமிக்கப்படலாம் என்று ஒரு சமூக ஊடகப் பதிவில் ஊகிக்கப்பட்டாலும், அது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
2024 ஜனவரி 4 அன்று திமுத் கருணாரத்னவிடமிருந்து காலியான இலங்கை டெஸ்ட் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்ட தனஞ்சய, இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் 18வது டெஸ்ட் தலைவராவார். அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் 15 போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார், அதில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று, 7 போட்டிகளில் தோல்வியடைந்து, மேலும் 2 போட்டிகளை வெற்றி தோல்வியின்றி முடித்துள்ளார். அவரது தலைமைத்துவத்தின் வெற்றி விகிதம் 40% ஆகும்.
தனஞ்சயவின் தலைமையில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷுக்கு எதிராக தொடர் வெற்றிகளைப் பெற்றதுடன், 2014 க்குப் பிறகு இங்கிலாந்தில் (ஓவல் மைதானத்தில்) ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறவும் முடிந்தது. இருப்பினும், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் சந்தித்த தோல்விகள் தலைமைத்துவ மாற்றத்திற்கு வழிவகுத்ததாகத் தெரிகிறது.
1991 செப்டம்பர் 6 அன்று ஹம்பாந்தோட்டையில் பிறந்த தனஞ்சய மதுரங்க டி சில்வா, கொழும்பு மகாநாம கல்லூரியில் குறுகிய காலம் கல்வி கற்ற பின்னர் காலி ரிச்மண்ட் கல்லூரியில் இருந்து கிரிக்கெட் களத்திற்குள் நுழைந்தார். வலது கை மத்திய வரிசை துடுப்பாட்ட வீரராகவும், சுழற்பந்து வீச்சாளராகவும் திறமைகளை வெளிப்படுத்தும் அவர், இதுவரை 69 டெஸ்ட் போட்டிகளில் 13 சதங்கள் மற்றும் 20 அரை சதங்களுடன் 4,431 ஓட்டங்களை குவித்துள்ளார். அவரது டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி 38.21 ஆகும். மேலும், அவர் 43 டெஸ்ட் விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு சோகமான சம்பவம் 2018 இல் பதிவாகியுள்ளது. தெஹிவளை - கல்கிசை மாநகர சபையின் உறுப்பினராக இருந்த அவரது 62 வயது தந்தை கே. ரஞ்சன் டி சில்வா, 2018 மே 24 அன்று இரவு 8.30 மணியளவில் ரத்மலானையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சோகத்தின் காரணமாக, மறுநாள் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் புறப்படவிருந்த சுற்றுப்பயணத்தில் இருந்து தனஞ்சய விலகினாலும், பின்னர் இரண்டாவது போட்டிக்கு மீண்டும் அணியில் இணைந்தார்.
சந்துனி நிசான்சலாவை மணந்த தனஞ்சயவுக்கு 2022 இல் பிறந்த ஆந்யா என்ற மகள் உள்ளார். 2016-17 ஆம் ஆண்டின் சிறந்த இலங்கை டெஸ்ட் துடுப்பாட்ட வீரராகவும், 2025 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் சகலதுறை வீரராகவும் விருதுகளை வென்ற அவர், தலைமைப் பதவியில் இருந்து விலகினாலும், இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்த தொடர்ந்து தயாராக இருக்கிறார்.