இலங்கையில் முதன்முறையாக தேசிய கட்டிடக் கோவை (National Building Code of Sri Lanka - NBCSL) ஒன்றை உருவாக்குவதற்கும் ஸ்தாபிப்பதற்கும் அரசாங்கம் தேசிய மட்டத்திலான ஒரு திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தின் பிரதான நோக்கம், தீவு முழுவதும் கட்டப்படும் கட்டிடங்களின் பாதுகாப்பு, தரம், நிலைத்தன்மை மற்றும் அனர்த்தங்களை தாங்கும் திறனை மேலும் வலுப்படுத்துவதாகும்.
தற்போது இலங்கையில் சட்டபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்ட ஒற்றை தேசிய கட்டிடக் கோவை நடைமுறையில் இல்லை. தற்போது, நாட்டின் கட்டிட வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு சர்வதேச கட்டிடக் கோவைகள், யூரோகோட்கள் (Eurocodes), பிரித்தானிய தரநிலைகள் மற்றும் இந்திய தரநிலைகள் போன்ற பல சர்வதேச தரநிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், உள்ளூர் விதிமுறைகள் மற்றும் துறைசார்ந்த சிறப்புத் தேவைகளும் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.பல தரநிலைகளைப் பயன்படுத்துவதால் கட்டிட வடிவமைப்புகளை உறுதிப்படுத்துவதிலும், அங்கீகாரம் வழங்குவதிலும், சட்டங்களை அமுல்படுத்துவதிலும் சில முரண்பாடுகள் எழலாம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, முன்மொழியப்பட்ட புதிய தேசிய கட்டிடக் கோவை மூலம் சர்வதேச தரநிலைகளுக்கு இணங்கவும், இலங்கையின் உள்ளூர் நிலைமைகளுக்குப் பொருத்தமானதாகவும் ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்குவது எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளம், மண்சரிவுகள் மற்றும் பலத்த காற்று போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு இலங்கை ஆளாகியுள்ளதாலும், நாட்டில் பல்வேறு காலநிலை, புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் நிலவுவதாலும் இத்தகைய ஒரு கட்டமைப்பின் தேவை மிகவும் முக்கியமானது. இந்த முன்மொழியப்பட்ட தேசிய கட்டிடக் கோவை, கட்டமைப்புப் பாதுகாப்பு, தீப் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய அணுகல் (universal accessibility) உள்ளிட்ட 10 முக்கிய தொழில்நுட்பத் துறைகளை உள்ளடக்கும். அத்துடன், கட்டிட அனுமதி வழங்குதல், ஆய்வுகள், இணக்கத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சட்டங்களை அமுல்படுத்துதல் ஆகியவற்றுக்கான நடைமுறை பொறிமுறையும் இதன் கீழ் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இத்திட்டம் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்த தலைமையில் ஒக்டோபர் 8ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI),
தேசிய திட்டமிடல் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA) மற்றும் கட்டுமானத் தொழில் அபிவிருத்தி அதிகார சபை (CIDA) ஆகிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) தேசிய திட்டமிடல் திணைக்களத்திற்கு சமர்ப்பித்த இத்திட்ட முன்மொழிவுக்கு 2026-2028 காலப்பகுதியில் அமுல்படுத்துவதற்கு தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு குறிப்பாணையின்படி, இத்திட்டத்திற்கு 2025 ஒக்டோபர் 21 அன்று அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள், தொழில்சார் நிறுவனங்கள், கல்வியாளர்கள், கட்டுமானத் தொழில்முனைவோர் மற்றும் பிற பங்குதாரர்களின் ஆலோசனையுடன், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI), கட்டுமானத் தொழில் அபிவிருத்தி அதிகார சபை (CIDA) மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நிர்வாகத்தின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்படும்.