இஷாராவுக்கும் பத்மாவுக்கும் குரல் பரிசோதனை

voice-test-for-ishara-and-padme

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் இஷாரா செவ்வந்தி மற்றும் பாதாள உலகக் குழு உறுப்பினர் என கருதப்படும் மந்திணு பத்மசிறி பெரேரா அல்லது கெஹெல்பத்தற பத்மே ஆகிய சந்தேகநபர்களின் தொலைபேசி உரையாடல்கள் மூலம் பல முக்கிய ஆதாரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவினர் கடந்த 02ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவுக்கு அறிவித்தனர்.

இந்த இரண்டு சந்தேகநபர்களின் தொலைபேசி குரல் பதிவுகளை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் மூலம் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், கொலைக்கு முன்னரான அவர்களின் திட்டங்கள் மற்றும் கொலைக்குப் பின்னரான அவர்களின் நடத்தை முறைகள் பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விடயங்களை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில், இஷாரா செவ்வந்தி மற்றும் கெஹெல்பத்தற பத்மே ஆகியோரின் குரல் பரிசோதனைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்க அனுமதி வழங்குமாறு கொழும்பு குற்றப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.



கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் கூண்டில் கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பான 45 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது ஒரு சந்தேகநபர் மட்டுமே நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜரானார், கெஹெல்பத்தற பத்மே உட்பட ஏனைய சந்தேகநபர்கள் ஜூம் தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்துடன் இணைக்கப்பட்டனர். முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த பிரதான நீதவான், சம்பந்தப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் குரல் பரிசோதனைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்க அனுமதி வழங்கியதுடன், அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

voice-test-for-ishara-and-padme

Post a Comment

Previous Post Next Post