நேற்று (07) இரவு பனாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாராச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பனாகொட மெதமண்டியா பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஓட்டி வந்த மோட்டார் வாகனம் வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி ஒருவரை மோதியுள்ளது. விபத்தை ஏற்படுத்தி பாதசாரிக்கு காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் பொலிஸார் பாராளுமன்ற உறுப்பினரை இவ்வாறு கைது செய்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த நபர் தற்போது ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் வெல்லவாய ஹுவமாவெல, திவெல் கந்தூர பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடையவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட 50 வயதுடைய பாராளுமன்ற உறுப்பினர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.