பிணையில் விடுவிக்கப்பட்டு ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான சேபால ரத்நாயக்க அமில சம்பத் அல்லது 'ரோடும்ப அமில' இன்று (20) காலை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் ரஷ்யாவிலிருந்து அழைத்து வரப்பட்ட 44 வயதுடைய இந்த சந்தேகநபர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இலங்கையில் நடந்த பல பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த ரோடும்ப அமில, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக நாட்டின் பல நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், சர்வதேச செம்பிரகடனங்களும் வெளியிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்படுவது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னர், 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாதாள உலகத் தலைவரான மாக்கந்துரே மதுஷ் நடத்திய பிறந்தநாள் விழாவின் போது அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்ட சந்தேகநபர், 2023 ஆம் ஆண்டு மே மாதம் 03 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை, ஊருபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த ரோடும்ப அமில, குறிப்பாக தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு நடந்த பல கொலைகள், கப்பம் கோரல்கள் மற்றும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் பாதாள உலக உறுப்பினர்களான அங்கொட லொக்கா மற்றும் மாக்கந்துரே மதுஷ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது 'கிளப் வசந்த' 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 08 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் சந்தேகநபருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன், 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி முல்லேரியா பிரதேசத்தில் நடந்த ஒரு கொலை சம்பவத்துடனும் அவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.